Published : 05 Aug 2019 09:16 PM
Last Updated : 05 Aug 2019 09:16 PM
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ சப்பரப் பவனி இன்று (திங்கள்கிழமை) மாலை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
437-வது ஆண்டு திருவிழா:
தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் 437-வது ஆண்டு பெருவிழா கடந்த மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பெருவிழா நாள்களில் தினமும் காலை திருயாத்திரை திருப்பலிகள், இளையோர், முதியோர்,மாற்றுத்திறனாளிகள்,தொழிலாளர்கள்,மீனவர்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பு மக்களுக்கான சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. அதுபோல மாலையில் செபமாலை, மறையுரை நற்கருணை ஆசீர் நடைபெற்றது.
மாலை ஆராதனை:
3-ம் திருவிழாவான கடந்த 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை நற்கருணை பவனியும், 10-ம் நாளான இன்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் பெருவிழா சிறப்பு மாலை ஆராதனையும், தொடர்ந்து பேராலய வளாகத்தில் மட்டும் அன்னையின் திருவுருவ சப்பர பவனியும் நடைபெற்றது.
கூட்டுத் திருப்பலி:
தூய பனிமய மாதா பேராலய பெருவிழா தினமான இன்று (ஆக.5) காலை 4.30 மணிக்கு முதல் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து காலை 5.30 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதையடுத்து காலை 7.30 மணிக்கு ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் பெருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட அருட்தந்தையர்கள் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினர்.
காலை 10 மணிக்கு மறைவட்ட முதன்மை குரு ரோலிங்டன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.நணபகல் 12 மணிக்கு திருச்சி முன்னாள் ஆயர் அந்தோணி டிவோட்டா தலைமையில் தூத்துக்குடி மண்ணின் மைந்தர் அருட்தந்தையர்கள் நிறைவேற்றிய நன்றித் திருப்பலி நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு என்.ஏ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆடம்பரத் திருப்பலி நடைபெற்றது. இன்று ஒரே நாளில் காலை முதல் மாலை வரை தொடர்ந்து 7 திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.
அன்னையின் திருவுருவ பவனி:
இதனை தொடர்ந்து இரவு 7 மணியளவில் அன்னையின் திருவுருவ சப்பரப் பவனி தொடங்கியது. பேராலய வளாகத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பனிமய அன்னையை பக்தர்கள் நகர வீதிகளில் பவனியாக எடுத்து வந்தனர்.
செயின்ட் பீட்டர் தெரு, மணல் தெரு, எம்பரர் தெரு, பெரைரா தெரு, பிரெஞ்ச் சாப்பல் தெரு, ஜி.சி. சாலை, வி.இ. சாலை, தெற்கு கடற்கரை சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக பவனி மீண்டும் பேராலய வளாகத்தில் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து பேராலயத்தில் நற்கருணை ஆசீர் நடைபெற்றது.
இந்த பவனியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பலத்த பாதுகாப்பு:
அன்னையின் திருவுருவ பவனியை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) அருண் சக்திகுமார் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன. பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. தூத்துக்குடி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.
திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பேராலய பங்குத்தந்தை குமார் ராஜா, உதவி பங்குத்தந்தை கிங்ஸ்டன் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT