Published : 05 Aug 2019 05:23 PM
Last Updated : 05 Aug 2019 05:23 PM
மதுரை,
தமிழகத்தின் முதல் பாரம்பரிய மலர்கள் மகத்துவ மையம், மதுரையில் சத்தமில்லாமல் செயல்படத் தொடங்கியது. இந்தத் திட்டம் தொடங்க இடம் கிடைக்காததால் தற்காலிகமாக பூஞ்சுத்தி தோட்டக்கலைப் பண்ணையில் செயல்படத் தொடங்கியது.
ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் (திண்டுக்கல், மதுரை, தேனி) மண்வளம், காலநிலையில் உற்பத்தியாகும் மல்லிகை, சம்பங்கி, செவ்வந்தி, செண்டுமல்லி, வாடாமல்லி, கோழிக்கொண்டை, கனகாம்பரம் உள்ளிட்ட பாரம்பரிய மலர்களுக்கு உள்ளூர் சந்தை முதல் உலகச் சந்தை வரை நல்ல வரவேற்பு இருந்தது.
சுப நிகழ்ச்சிகள், பொதுநிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக், காகிதப் பூக்கள் பயன்பாட்டால் இந்த பாரம்பரியப் பூக்களுக்கு முன்பிருந்த வரவேற்பு குறைந்தது.
விவசாயிகளுக்குப் போதிய தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கவும், வழிகாட்டவும் தோட்டக்கலைத் துறையில் இதற்கான தனி அதிகாரிகள் இல்லாததால் இந்தப் பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் குறைந்தது. மதுரை மல்லிகைக்கு மட்டும் ஓரளவு சந்தைகளில் வரவேற்பு உள்ளது.
அதனால், இந்த பாரம்பரிய மலர்களைப் பாதுகாக்கவும், அதன் சாகுபடி பரப்பை மீட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் கடந்த 2018-ம் ஆண்டு மதுரையில் 5 ஏக்கரில் பாரம்பரிய மலர்கள் மகத்துவ மையம் அமைப்பதாக தமிழக அரசு அறிவித்தது. அதற்காக ரூ.2 கோடி நிதியையும் முதற்கட்டமாக ஒதுக்கியது.
ஆனால், மதுரை மாவட்டத்தில் இந்த பாரம்பரிய மலர்கள் மகத்துவ மையம் அமைக்க வருவாய்த்துறை அதிகாரிகள் இடம் ஒதுக்கவில்லை. சர்ச்சையும், சட்டச் சிக்கல்களும் உள்ள நிலத்தை ஒதுக்கியதால் அந்த இடங்களில் பணிகளைத் தொடங்க தோட்டக்கலைத்துறை முயற்சி செய்தால் உடனே அந்த நிலத்திற்கு நீதிமன்றத்தில் தனியார் தடை வாங்கிவிடுவார்கள்.
கடந்த ஒன்றரை ஆண்டாகத் திட்டம் ஒதுக்கியும், நிதி ஒதுக்கீடு செய்தும், இந்த பாரம்பரிய மலர்கள் மகத்துவ மையம் தொடங்க முடியாமல் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தவித்தனர். அதனால், இந்தத் திட்டத்தை உடனடியாகத் தொடங்காவிட்டால் வேறு மாவட்டத்திற்கு மாற்றுவதற்கு மற்ற மாவட்ட தோட்டக்கலைத் துறை முயற்சி செய்து வந்தது.
இந்நிலையில், தற்போது மேலூர் அருகே பூஞ்சுத்தி தோட்டக்கலைப் பண்ணையில் பாரம்பரிய மலர்கள் மகத்துவ மையம் செயல்படத் தொடங்கியது. தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் பூபதி, பூஜைகள் போட்டு, இந்த தற்காலிக பாரம்பரிய மலர்கள் மகத்துவ மையத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் மல்லிகை, சம்பங்கி, கோழிக்கொண்டை பூ விதைகளை விதைத்துள்ளார்.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் பூபதியிடம் கேட்டபோது அவர் கூறுகையில், "மல்லிகைக்குதான் மகத்துவ மையம் தொடங்கக் கேட்டிருந்தோம். ஆனால், மல்லிகை உள்பட அனைத்து பாரம்பரிய மலர்களுக்கும் சேர்த்து இந்த மகத்துவ மையம் தொடங்க அரசாணை வெளியிடப்பட்டது.
பாரம்பரிய மலர்கள் மகத்துவ மையத்தில் விவசாயிகளுக்கான பயிற்சி மையம், பசுமை குடோன், பதப்படுத்துதல் மையம், வாசனை திரவியம் தயாரிக்கும் மையம் மற்றும் ஏற்றுமதி மையம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.
எந்த மாதிரி சாகுபடியை மேற்கொண்டால் எப்படி மகசூலைப் பெறலாம் போன்ற செயல் விளக்கங்கள் செய்து காட்டப்படும். அதுபோல், மலர்கள் உற்பத்தியை ஊக்கவிக்கப் பயிற்சியும், வழிகாட்டுதலும் அதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளால் பிரத்யேகமாக வழங்கப்படும்.
தற்போது இந்த மையம் ஒரு ஏக்கரில், தோட்டக்கலைப் பண்ணையில் தற்காலிகமாகத் தொடங்கப்பட்டுள்ளது. அதனால், புதிதாக கட்டிடங்கள் எதுவும் கட்டாமல் மலர்கள் உற்பத்தி மட்டும் இந்த மையத்தில் நடக்கும், ’’ என்றார்.
தற்காலிகமாக தொடங்கப்பட்டது ஏன்?
ஆரம்பத்தில் பூஞ்சுத்தி தோட்டக்கலைப் பண்ணை அருகே அரசு புறம் போக்கு இடம் ஒதுக்கினார்கள். சிலர் அந்த நிலத்தில் இந்தத் திட்டத்தை தொடங்கவிடாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடையானை பெற்றனர். அதன்பிறகு மேலூர் அருகே அம்பலகாரன்பட்டியில் 25 ஏக்கர் ஒதுக்கினார்கள். உள்ளூர் மக்கள், இந்தத் திட்டத்தின் சிறப்பைப் புரிந்து கொள்ளாமலே சிலர் தூண்டுதல் பேரில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இப்படி இடம் கிடைக்காமலே தள்ளிப்போய்க் கொண்டிருந்ததால் பூஞ்சுத்தி தோட்டக்கலைப் பண்ணையிலே தற்காலிகமாக அதற்கான கட்டிடமும், ஆய்வு மையமும் இல்லாமல் இந்த மிகப்பெரிய சத்தமில்லாமல் தொடங்கப்பட்டுள்ளது.
வெறும் அரை ஏக்கரில் தொடங்கப்பட்டுள்ள இந்த மகத்துவ மையம், பண்ணை அருகே ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலம் கிடைத்ததும் கட்டுமானப்பணிகள் தொடங்கி அதில் பிரம்மாண்டமாக செயல்படத் தொடங்கும் என்று தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT