Published : 05 Aug 2019 04:57 PM
Last Updated : 05 Aug 2019 04:57 PM
தமிழக - கேரள எல்லையில் உள்ள மலை கிராமங்களில் யானை வருகையை உணரவும், அவற்றை திசைமாறிச் செல்ல வைக்கவும் கம்பிகளில் பீர் பாட்டில்கள், குண்டு பல்புகளைக் கட்டி வைத்து நூதன முறையில் யானைகளை விரட்டுகின்றனர். யானை இப்பகுதியில் நுழையும்போது பாட்டில்கள் உரசி சப்தம் எழுவதுடன், உடைந்து சிதறுவதால் யானைகள் பின்வாங்கிச் செல்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
தமிழக கேரள எல்லைப்பகுதியான போடிமெட்டு அருகே பூப்பாறை, சாந்தம்பாறை, பாப்பம்பாறை, உடும்பஞ்சோலை, சின்னக்கானல், பெரியகானல், யானை இறங்கல் உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன.
ஆண்டு முழுவதும் குளிர்ச்சியும், மிதமான வெயிலும் உள்ள இந்தப் பருவநிலையினால் காபி, மிளகாய், இஞ்சி, ஏலக்காய், பலா என்று பல்வேறு பயிர்கள் அதிக அளவில் விளைகின்றன.
மலை சார்ந்த விளைநிலங்கள் என்பதால் யானை, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகளும் அதிகம் உள்ளன. இரவு நேரங்களில் பலா போன்றவற்றை உண்பதற்காக குடியிருப்பு மற்றும் விளைநிலங்களுக்குள் யானைகள் புகுந்து விடுகின்றன. இவற்றைத் தடுக்க பல இடங்களிலும் சோலார் வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அளவிற்கு செலவு செய்ய முடியாத சிறுவியாபாரிகள் பலரும் எளிமையான தொழில்நுட்பம் மூலம் யானைகளை விரட்டி வருகின்றனர். இதற்காக யானை வரும் வழியில் குறுக்குக் கம்பிகளை அதிக அளவில் கட்டி அதில் பீர் பாட்டில்களை நெருக்கமாகக் கட்டி வைத்து விடுகின்றனர். பீர் பாட்டிலில் காற்று புகுந்து வித்தியாசமான ஓசை வருவதாலும் யானை வருகை கட்டுப்படுத்தப்படுகிறது.
இது குறித்து சிங்குகண்டத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் கூறுகையில், ''கம்பி வழியே யானை வரும் போது பாட்டில் ஒன்றுக்கொன்று உரசி சப்தம் கேட்கும். எனவே நாங்கள் உஷாராகிவிடுவோம். பாட்டில் உடைந்து விழுவதால் சற்று மிரண்டு வேறு பாதையில் சென்றுவிடும். அருகிலேயே வீடு இருப்பதால் இவற்றைக் கண்காணித்து யானையை துரத்திவிடுவோம்'' என்றார்.
இதே பகுதியில் குண்டு பல்புகளை இதுபோன்று கட்டியும் யானைகளை விரட்டி வருகின்றனர்.
இது குறித்து சூசி கூறுகையில், ''குண்டு பல்புகளை வரிசையாக கட்டி விட்டு மின்வயர் வருவது போல தோற்றத்தை ஏற்படுத்துவோம். மின்சாரம் பாய்கிறது என்று யானை இப்பகுதியில் நுழைய தயக்கம் காட்டும். மீறி கம்பி வழியே வந்தால் பல்பு உரசி வெடித்துச் சிதறும். தனால் யானைகள் பின்வாங்கிவிடும். பல்பு சிதறல்கள் ஊசியாக இருப்பதால் இதில் யானைகள் கால் வைக்காது.
இது போன்ற எளிய விஷயங்களை வைத்து யானை வருவதை உணர்ந்து பயிர்களைப் பாதுகாத்துக் கொள்வோம். யானைகளால் எங்கள் உயிருக்கு பெரிய அளவில் அச்சுறுத்தல் வந்தது கிடையாது. அதன் குணங்களை அறிந்து இடையூறு தராமல் பாதுகாப்பாக இருந்து கொள்வோம்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT