Published : 05 Aug 2019 04:44 PM
Last Updated : 05 Aug 2019 04:44 PM
ஐந்தாயிரம் டன் பிளாஸ்டிக் குப்பையை அகற்ற 60 ஆண்டுகளுக்கு பிறகு இளையான்குடி ஊருணியை அதிகாரிகள் மீட்டனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சியில் கடும் குடிநீர் பிரச்சினை உள்ளது. நிலத்தடிநீர் இல்லாததால் அனைத்து தேவைகளுக்கும் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதையடுத்து பேரூராட்சிக்குட்பட்ட ஊருணிகளை மீட்க ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார்.
அதன்படி வட்டாட்சியர் பாலகுரு தலைமையில் வருவாய்த்துறை, பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்ததில் சமுத்திரம் ஊருணி, எலுமிச்சை ஊருணி, நெசவுப்பட்டறை உள்ளிட்ட 5 ஊருணிகள் மாயமானது தெரியவந்தது. இதில் இளையான்குடி சாலையூரில் உள்ள நெசவுப்பட்டறை ஊருணி குப்பைக் கிடங்காக இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இந்த ஊருணி பல நூறு ஆண்டுகள் பழமையானது. ஐந்தரை ஏக்கர் பரப்புள்ள இந்த ஊருணியை அப்பகுதி மக்கள் குளிக்க, துணி துவைக்க பயன்படுத்தி வந்தனர். காலப் போக்கில் குப்பைகளைக் கொட்டியதால் ஊருணி இருந்த இடம் தெரியாமல் மறைந்தது.
மேலும் குப்பைக் கிடங்காக மாறியதால் அந்த ஊருணியை மீட்பதில் சிக்கல் இருப்பதாக ஆட்சியரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் குப்பைகளை அகற்றி கட்டாயம் ஊரணியை மீட்க வேண்டுமென ஆட்சியர் தெரிவித்தார். இதையடுத்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஊருணியில் கொட்டப்பட்டிருந்த 5 ஆயிரம் டன் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டன.
தொடர்ந்து நான்கு நாட்களாக பணி நடைபெற்று வருகிறது. தோண்ட, தோண்ட குப்பை வந்து கொண்டே இருக்கின்றன. இப்பணிக்கு அப்பகுதி இளைஞர்களும் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில், இந்த ஊருணி 10 அடி ஆழம் வரை தோண்டப்பட உள்ளது. மேலும் வரத்துக் கால்வாயும் சீரமைக்கப்பட உள்ளது, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT