Published : 19 Jul 2015 11:00 AM
Last Updated : 19 Jul 2015 11:00 AM

கல்லூரிப் பேராசிரியரை சந்தித்து நெகிழ்ந்த அப்துல் கலாம்: 60 ஆண்டுகளாக தொடரும் குரு-சிஷ்யன் நட்பு

முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், தனது கல்லூரிப் பேராசிரியரை திண்டுக்கல்லில் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார்.

கடந்த 1952-54-ம் ஆண்டு காலகட்டத்தில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் அப்துல் கலாம் படித்தார். அப்போது, கல்லூரியில் இயற்பியல்துறை பேராசிரியராக சின்னத்துரை என்பவர் இருந்துள்ளார். இவர்தான், கல்லூரி நாட்களில் கலாமின் அறிவியல் ஆர்வத்தை கண்டறிந்து ஊக்குவித்தவர். தற்போது சின்னத்துரைக்கு 91 வயதாகிவிட்டதால், திண்டுக்கல் இயேசுசபை இல்லத்தில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில், அப்துல் கலாம் நேற்று மதுரை வழியாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். செல்லும் வழியில் தனது பேராசிரியரை சந்திக்க திண்டுக்கல் வந்தார். இருவரும் அவ்வப்போது சந்தித்துக் கொண்டாலும், நீண்ட நாள்களுக்குப் பிறகு சந்தித்ததால் பேராசிரியர் சின்னத்துரையை ஆரத் தழுவி கலாம் நலம் விசாரித்தார். இதனால் நெகிழ்ச்சியடைந்த சின்னத்துரை கண்ணீர் விட்டார். இதைப் பார்த்த கலாம், அவரைத் தேற்றி சாந்தப்படுத்தினார்.

பின்னர் தான் எழுதிய புத்தகத்தை பேராசிரியரிடம் கலாம் வழங்கினார். அதன்பின் இருவரும் தனியறையில் சிறிது நேரம் கல்லூரிக் கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

அப்துல் கலாம், பேராசிரியர் சின்னத்துரையின் நட்பு குறித்து இயேசு சபை நிர்வாகிகள் கூறியது: சின்னத்துரை, வகுப்பறையில் தொடர்ந்து 3 மணி நேரம் ஓய்வின்றி பாடம் நடத்துவார். மாணவர்களுக்கு பாடத்தை முழுமையாக புரிய வைக்காமல் செல்ல மாட்டார். கற்றுக் கொடுத்த பாடப் பகுதிகள் குறித்து நூலகத்துக்குச் சென்று கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளும்படி வலியுறுத்துவார். மறுநாள், அப்பகுதியில் இருந்து மாணவர்களிடம் கேள்விகளைக் கேட்பார். அப்போது கலாம் மிகச் சரியாக பதில்களைக் கூறி ஆச்சரியப்படுத்துவாராம். விண்வெளித் துறையில் கலாமுக்கு இளம் வயதில் இருந்த ஆர்வத்தைக் கண்டறிந்த சின்னத்துரை, சரியான திசையில் அவருக்கு வழிகாட்டியுள்ளார் என்றனர்.

முன்னதாக, திண்டுக்கல் வந்த கலாமை ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வரவேற்றார்.

காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x