Last Updated : 04 Aug, 2019 05:12 PM

 

Published : 04 Aug 2019 05:12 PM
Last Updated : 04 Aug 2019 05:12 PM

மதுரை மீனாட்சியைத் தரிசித்த பிரதமர் மோடியின் சகோதரர்; ராமேசுவரம் கோயிலிலும் தரிசனம்

மீனாட்சியம்மன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பிரதமர் மோடியின் சகோதரர் பங்கஜ் மோடியுடன், மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பங்கஜ் ராய் மோடி இன்று (ஆகஸ்ட் 4) சுவாமி தரிசனம் செய்தார். பிறகு அவர் ராமேசுவரம் கோயிலுக்கும் சென்றார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பங்கஜ் ராய் மோடி. இவர் இன்று (ஆகஸ்ட் 4) காலை 7.50 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தார். தெற்கு கோபுரம் வழியாக கோயிலுக்குச் சென்ற அவர் அம்மன், சுவாமி சன்னிதிக்குச் சென்று நீண்ட நேரம் வழிபட்டார். அவருக்கு அர்ச்சர்கள் மாலை அணிவித்து, மரியாதை செய்து, கோயில் பிரசாதமும் வழங்கினர். 

பின்னர் முக்குறுணி விநாயகர், கொடிமரம் உட்பட கோயிலுக்குள் பல இடங்களுக்கும் சென்றார். பொற்றாமரைக் குளம் அருகில் சிறிது நேரம் அமர்ந்து,  உடன் வந்தவர்களிடம் கோயிலின் சிறப்புகள் பற்றிக் கேட்டறிந்தார். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாகவே அவர் உள்ளே இருந்தார். பிறகு சுமார் 9.05 மணிக்கு கோயிலை விட்டு வெளியே வந்தார்.

இதன்பின், அவர் மதுரை- அழகர்கோயில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு சென்றார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். இதைத் தொடர்ந்து காலை 10.40 மணிக்கு, கார் மூலம் ராமேசுவரத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். அவருடன் மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை  உள்ளிட்ட சிலர் உடன் இருந்தனர்.

முன்னதாக, தரிசனம் செய்ய வந்த பங்கஜ் மோடிக்கு கோவில் நிர்வாகம் சார்பில், சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது வருகையையொட்டி காவல் துறையினர்  பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x