Published : 22 Jul 2015 10:53 AM
Last Updated : 22 Jul 2015 10:53 AM

என்எல்சி தொழிலாளர்கள் போராட்டத்துக்கு மத்திய அரசு தீர்வுகாண வேண்டும்: வைகோ

புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம், ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நடக்கும் என்.எல்.சி. தொழிலாளர்கள் போராட்டத்துக்கு மத்திய அரசு தீர்வுகாணவேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன தொழிலாளர்கள் ஜூலை 20 ஆம் தேதி இரவு பணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவிலேயே தலைசிறந்த பொதுத்துறை நிறுவனமாக என்.எல்.சி. நிறுவனம் நவரத்னா தகுதியைப் பெற்றிருக்கிறது.

தென்னகத்தின் ஒளி விளக்காகத் திகழும் என்.எல்.சி. 2560 மெகா வாட் மின் உற்பத்தி செய்கிறது. தமிழ்நாட்டுக்கு மிகக் குறைந்த விலையில் மின்சாரம் வழங்கும் என்.எல்.சி.யின் வளர்ச்சிக்கு அதில் பணியாற்றும் தொழிலாளர்கள்தான் காரணமாகத் திகழ்கிறார்கள்.

13 ஆயிரம் நிரந்தரத் தொழிலாளர்களும், 12 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களும் தங்கள் கடும் உழைப்பின் மூலம் என்.எல்.சி. நிறுவனத்தின் உற்பத்தியைப் பெருக்கி நவரத்னா தகுதிக்கு உயர்த்தி இருக்கின்றனர்.

கடந்த 2013-14 ஆம் நிதி ஆண்டில் 1500 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய என்.எல்.சி. நிறுவனம் தொடர்ந்து பல ஆண்டுகளாகவே இந்தச் சாதனையைத் தக்கவைத்துக்கொண்டு வருகிறது.

என்.எல்.சி. தொழிலாளர்கள் 01.01.2012 முதல் ஊதிய மாற்று ஒப்பந்தத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரி பல மாதங்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

மத்திய தொழிலாளர் நல ஆணையருடன் நடைபெற்ற பல கட்டப் பேச்சுவார்த்தைகளில் என்.எல்.சி. நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க மறுத்துவிட்டதால், தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பை பிரகடனம் செய்துள்ளன.

புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் மற்றும் தொழிலாளர்கள் பெற்றுவந்த அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்தால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, தமிழ்நாடு இருளில் மூழ்கும் நிலையும் ஏற்படும்.

மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைளை நிறைவேற்றி, வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x