Last Updated : 03 Aug, 2019 05:16 PM

2  

Published : 03 Aug 2019 05:16 PM
Last Updated : 03 Aug 2019 05:16 PM

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்துக்கு மழை எப்போது? - தமிழ்நாடு வெதர்மேன் பதில்

படம்உதவி : ஃபேஸ்புக்

சென்னை,

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு எப்போது மழை பெய்யும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை மீண்டும் தொடங்குவது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பதில் அளித்துள்ளார்.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து மகராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக வெப்பச்சலனத்தால் அவ்வப்போது மழை பெய்து குளிர்வித்தது. 

இதனால் சென்னையில் வெப்பம் ஓரளவுக்கு தணிந்துள்ளது, நிலத்தடி நீரின் அளவும் இறங்கிய நிலையில் கடந்த வாரங்களில் பெய்த மழையால் ஓரளவுக்கு உயர்ந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரத்தில் பெய்த மழையால் கபிணி அணை, கேஆர்எஸ் அணை ஆகியவற்றில் நீர் வரத்து அதிகரித்து, தமிழகத்துக்கும் தண்ணீர் வந்தது. 

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்து எப்போது மழை கிடைக்கும், சென்னையில் அடுத்த மழை எப்போது பெய்யும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பேஸ்புக் பதிவில் எழுதிவரும் பிரதீப்ஜான் இந்து தமிழ்திசை(ஆன்லைன்) அளித்த பேட்டி: 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆகஸ்ட் முதல்வாரத்தில் மழைக்கு வாய்ப்பில்லை. அதாவது 10-ம் தேதி வரை கேடிசி பெல்ட்டில் மழை இருக்காது. ஒருவேளை மாலைநேரக் காற்றுகாரணமாக சென்னையில் ஆங்காங்கே ஏதாவது ஒருநாளில் மழை பெய்யக்கூடும். 

ஆனால், 10-ம் தேதிக்குப்பின் அதாவது இந்த மாதத்தின் நடுப்பகுதியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மட்டுமல்லாது உள்மாவட்டங்களிலும் வெப்பச்சலன மழை இருக்கும். இந்த வெப்பச்சலன மழை இடி, மின்னலுடன் கூடியதாக நல்ல மழை தரக்கூடியதாக இருக்கும். அதுவரை மழை இல்லை. 

தென் மேற்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்து வடமாநிலங்களில் பெய்து வருகிறது. மத்தியப்பகுதியில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக காற்றை உள்ளே இழுப்பதால் வடமாநிலங்களில் மழைமேகத்தை இழுத்து நல்ல மழையைக் கொடுக்கிறது. 

வங்க்கடலின் வடகிழக்குப்பகுதியில் உருவாவதற்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்படும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலைக்கும் தமிழகத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இந்த குறைந்தகாற்றழுத்த காற்றழுத்ததாழ்வு நிலை மழையைத் தூண்டிவிட்டு, இன்னும் வேகப்படுத்துமே தவிர பாதிப்பு ஏதும் இல்லை. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகினால்கூட, அதனால் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் நல்லமழை கிடைக்கவும் வாய்ப்புண்டு 

ஏற்கனவே மும்பையில் நேற்று முதல் மழை பெய்துவருகிறது, இன்னும் த இரு நாட்களுக்கு மிக கனமழை இருக்கும். அதேபோல ஆந்திராவில் கிருஷ்ணா, கோதாவரி படுகையிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், அலமாட்டி அணையில் இருந்து 1.5 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது, இந்த நீர் ஸ்ரீசைலத்துக்கு வந்துசேரும். கிருஷ்ணா பகுதியில் மழை அதிகரிக்க, சென்னைக்கு அதிகமான நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான காவிரி நீர்பிடிப்பு பகுதிகள், கேரளாவின் வயநாடு, கர்நாடகாவின் குடகு, கேஆர்எஸ் அணை, 
மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளான தமிழகத்தின் நீலகிரி, நெல்லை மாவட்டத்தின் சில பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டத்தின் சிலபகுதிகள், வால்பாறை, தேனி மாவட்டத்தில் பெரியாறு அணைப்பகுதி ஆகியவற்றில் நாளை இரவு அல்லது திங்கள்கிழமை முதல் மழை தொடங்கும். அடுத்த வாரத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழையை எதி்ர் பார்க்கலாம். குறிப்பாக குடகு பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இர இருப்பதாக தெரிகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அதிகரிக்கும் போது தமிழகத்துக்கு நீர்திறக்கப்படவும் வாய்ப்புள்ளது. 

இவ்வாறு பிரதீ்ப் ஜான் தெரிவித்தார்.

போத்திராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x