Published : 03 Aug 2019 02:33 PM
Last Updated : 03 Aug 2019 02:33 PM
எஸ்.கோவிந்தராஜ்
சுதந்திரப் போராட்டக் களத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்த பாளைய மன்னர்களில் வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், பூலித்தேவன், வேலு நாச்சியார் வரிசையில் கொங்கு நாட்டின் பங்காக இடம்பெற்றவர் மாவீரன் தீரன் சின்னமலை.
தீரன் சின்னமலையின் தியாகத்தைப் போற்றும் வகையில், ஈரோடு மாவட்டம் அறச்சலூர் ஓடாநிலையில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு, அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் ஏப்ரல் 17-ம் தேதி தீரன் சின்னமலையின் பிறந்தநாளும், ஆடி 18-ல் நினைவு நாளும் அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. மூத்த அமைச்சர்கள் பங்கேற்புடன் இன்று (ஆக. 3) தீரன் சின்னமலை நினைவுநாள் விழா கொண்டாடப்படும் நிலையில், ‘தீரன் சின்னமலைக்கு முழு உருவ வெண்கலச்சிலை அமைக்கப்படும்’ என்ற வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று ஆதங்கப்படுகின்றனர் கொங்கு பகுதி மக்கள்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகில் உள்ள மேளப்பாளையத்தில் 1756 ஏப்ரல் 17-ம் தேதி ரத்தினசாமி-பெரியாத்தாவுக்குப் பிறந்தவர் தீர்த்தகிரி. அப்போது கொங்கு நாட்டை மைசூர் மன்னர் ஆட்சி செய்ததால், கொங்குநாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு சென்றது.
இந்த வரிப் பணத்தைப் பறித்து ஏழைகளுக்கு வழங்கிய தீரன் சின்னமலை, பணம் எடுத்துச் சென்ற தண்டல்காரரிடம் ‘சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை பறித்ததாக சொல்’ என்று சொல்லி அனுப்பினார். அன்று முதல் சின்னமலை என்ற பெயர் அவருக்கு நிலைத்துவிட்டது.கடந்த 1801-ல் ஈரோடு காவிரிக் கரையிலும், 1802-ல் ஓடாநிலையிலும், 1804-ல்
அறச்சநல்லூரிலும் ஆங்கிலேயருடன் நடைபெற்றப் போர்களில் தீரன் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். போரில் சின்ன
மலையை வெல்ல முடியாது என்பதை உணர்ந்த ஆங்கிலேயர், சூழ்ச்சி மூலம் சின்னமலையை கைது செய்து, சங்ககிரி கோட்டைக்குச் கொண்டுசென்று, போலி விசாரணை நடத்தி 1805 ஜூலை 31-ம் தேதி தூக்கிலிட்டனர். அவர் தம்பி கருப்ப சேர்வையும் உடன் வீரமரணம் எய்தார்.
அதிமுக ஆட்சியின்போது முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமியின் முயற்சியால், அறச்சலூர் ஓடாநிலையில் தீரன் சின்னமலைக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டது. இந்த மணிமண்டபத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், கொங்கு அமைப்புகள், பொதுநல அமைப்புகள், தீரனின் வாரிசுகள், சொந்தங்கள், பொதுமக்கள் ஆடி 18-ம் தேதி ஒன்று திரண்டு தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.இதையொட்டி, இன்று அரசுசார்பில் நடைபெறும் விழாவில், மூத்தஅமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க உள்ளனர்.
தீரன் சின்னமலையின் வாரிசுகள் கவுரவிக்கப் படுவதுடன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளன.
ஆண்டுதோறும் அரசு விழா நடத்தப்பட்டாலும், தீரன் சின்னமலைக்கு முழு உருவ வெண்கலச்சிலை வைக்க வேண்டும், ஓடாநிலையில் தீரனின் வரலாற்றைக் கூறும் நிரந்தர புகைப்படக் கண்காட்சி, ஒளி, ஒளி காட்சி அமைப்பு ஏற்படுத்த வேண்டும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் வந்து செல்லும் வகையில் பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இன்னும் நிறைவேறாமல் உள்ளன.
இதுகுறித்து தீரன் சின்னமலை வாரிசுதாரர்களின் உறவினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் விவசாயப் பிரிவு மாநிலச் செயலருமான ஆர்.வி.ராஜ்குமார் கூறும்போது, “தீரன் சின்னமலையின் வாரிசுகள் மற்றும் உறவினர்கள், ஓடாநிலை அருகே வாழைத்தோட்டவலசு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் விவசாயிகள். அந்தப் பகுதி மிகவும் வறட்சியான பகுதி. எனவே, இந்தப் பகுதியை கீழ்பவானி பாசன ஆயக்கட்டில் சேர்க்க வேண்டு என்பது தீரனின் வாரிசுதாரர்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். இதை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.
அதேபோல, ஓடாநிலை மணிமண்டபத்தில் தீரன் சின்னமலையின் கற்சிலைக்கு மாற்றாக, முழு உருவ வெண்கலச் சிலை வைக்க வேண்டும் என்றும் நீண்ட நாளாக வலியுறுத்தி வருகிறோம். கடந்த ஆண்டு நடந்த, தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழாவில் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘தீரன் சின்னமலையின் கற்சிலை, முழு உருவ வெண்கலச்சிலையாக மாற்றப்படும்’ என மேடை யிலேயே அறிவித்தார். ஆனால், ஓராண்டாகியும் அதற்கான நடவடிக்கை தொடங்கவில்லை.ஆண்டுக்கு ஒருமுறை மாலை அணிவித்து, அரசு விழா நடத்தினால் மட்டும் போதாது. தீரன் சின்னமலையின் வீரத்தை, தியாகத்தை அனைவரும் அறியச் செய்யும் வகையில் இப்பகுதியை சுற்றுலாதலமாக அறிவித்து, பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் வந்து செல்ல போதிய போக்குவரத்து வசதியைச் செய்துதர வேண்டும். தீரன் சின்னமலை உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்களின் நிரந்தர புகைப்படக் கண்காட்சி, தீரனின் போர்க் காட்சிகளை வீடியோ மூலம் ஒளிபரப்பும் வகையிலான அரங்கம், நூலகம், பூங்கா போன்ற வசதிகளை அரசு செய்துதர வேண்டும். ஓடாநிலை நினைவு மண்டபத்தைச் சுற்றிலும் பாதுகாப்பான மதில் சுவர் அமைக்க வேண்டும். இந்தப் பணிகளை அரசு மேற்கொண்டால், கோடிக்கணக்கான மக்களிடம் தீரன் சின்னமலையின் தியாகம் சென்றடையும்” என்றார்.
‘தளபதி’க்கு மரியாதை செலுத்தப்படுமா?
மாவீரன் தீரன் சின்னமலையின் படைத் தளபதியாக இருந்தவர் பொல்லான். அருந்ததியினர் சமூகத்தைச் சேர்ந்த பொல்லான், ஆங்கிலேயரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்ட அறச்சலூர் கிராமம் நல்லமங்காபாளையத்தில் அவருக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார், பொல்லான் வரலாறு மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.வடிவேல்.இதுகுறித்து அவர் கூறும்போது, “தீரன் சின்னமலையின் படைத் தளபதியாக இருந்து உயிர்த் தியாகம் செய்த மாவீரன் பொல்லான் ஆங்கிலேயர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட இடமான நல்லமங்காபாளையத்தில், அரசு புறம்போக்கு நிலத்தில் ரூ.2 லட்சம் செலவில், நினைவுச் சின்னம் அமைத்தோம். அதை 2017-ல் வருவாய்த் துறையினர் இடித்து விட்டனர். அதேஇடத்தில் பொல்லான் நினைவுச் சின்னம் அமைக்க இடம் கோரி நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, மாவட்ட நிர்வாகம் நிலம் ஒதுக்கீடு செய்ய அரசுக்கு முன்மொழிவு அனுப்பியுள்ளது.
நிலத்தை ஒதுக்கீடு செய்வதுடன், அங்கு பொல்லான் நினைவுச் சின்னம், மணி மண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். பொல்லானின் தியாகத்தை அங்கீகரிக்கும் வகையில், ஜூலை 17-ல் பொல்லான் நினைவு நாளன்று அவருக்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்தாலும், மூத்த அதிகாரிகளோ, அமைச்சர்களோ, எம்.எல்.ஏ.க்களோ பொல்லானுக்கு மரியாதை செலுத்த வராதது வருத்தமளிக்கிறது.
எனவே, ஓடாநிலையில் நடைபெறும் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழாவில், பொல்லான் படத்துக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தி, அவரது தியாகத்தை அங்கீகரிக்க வேண்டும். பொல்லானுக்கு நினைவுச் சின்னம், மணிமண்டபம் அமைக்கும் வரை எங்களது போராட்டங்கள் தொடரும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT