Last Updated : 02 Aug, 2019 05:07 PM

2  

Published : 02 Aug 2019 05:07 PM
Last Updated : 02 Aug 2019 05:07 PM

சிவகங்கையில் ஆக்கிரமிப்புக்கு முடிவு கட்டி நீர் சேமிப்பை அதிகரிக்க பிறை வடிவ கண்மாய்களை முழு நிலவு போன்று மாற்றும் முன்னோடி திட்டம்

ஆக்கிரமிப்புகளைத் தடுத்து நீர் சேமிப்பை அதிகரிக்கும் வகையில் பிறை வடிவ கண்மாய்களை முழு நிலவு போன்று மாற்றும் முன்னோடி திட்டம் தமிழகத்திலேயே முதன் முறையாக சிவகங்கை மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் 678 பொதுப்பணித்துறை கண்மாய்கள் (ஏரிகள்) உட்பட 4,966 கண்மாய்கள் உள்ளன. கண்மாய்கள் நிறைந்த இரண்டாவது மாவட்டமாக சிவகங்கை உள்ளது. இங்குள்ள கண்மாய்கள் சங்கிலித் தொடர்போன்று ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக உள்ளன. 

இக்கண்மாய்களை இணைக்கும் பாலமாக சிற்றாறுகள் உள்ளன. இதில் பெரும்பாலான கண்மாய்கள் தனியார் ஆக்கிரமிப்புகளாலும், சீமைக்கருவேல மரங்கள், அதலாச் செடிகளாலும் இருந்த இடம் தெரியாமல் உள்ளன. 

தற்போது குடிமராமத்துத் திட்டத்தில் 109 கண்மாய்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. அதேபோல் மற்ற கண்மாய்களை மாவட்ட நிர்வாகம் சொந்த முயற்சியில் தூர்வாரி வருகிறது.

மேலும் கண்மாய்களை தூர்வாரினாலும் சில ஆண்டுகளிலேயே கண்மாய்களை ஆக்கிரமித்து சிலர் விவசாயம் செய்கின்றனர். அதேபோல் கண்மாய் முழு அளவில் நிறைந்தாலும் ஒரு மாதத்திற்கு கூட தண்ணீர் போதவில்லை. 

இதுகுறித்து ஆட்சியர் ஜெயகாந்தன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வில் செய்ததில் கண்மாய்கள் அனைத்தும் குளம் போன்று வட்டமாக இல்லாமல் பிறை வடிவில் ஒருபுறம் மட்டுமே கரை உள்ளது. மறுபுறம் சமதளப் பரப்பாகவே உள்ளது. இதன் காரணமாகவே ஆக்கிரமிப்புகள் ஏற்படுவதோடு, நீர் சேமிப்பும் குறைகிறது. 

இதையடுத்து பிறை வடிவ கண்மாய்களை முழு நிலவு போன்று மாற்றும் முன்னோடி திட்டத்தை தமிழகத்திலேயே முதன் முறையாக சிவகங்கை மாவட்டத்தில் செயல்படுத்த ஆட்சியர் முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் ஜெயகநாதன் கூறுகையில், ‘ஒருபுறம் மட்டுமே கரை இருப்பதால் மறுபுறத்தை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்கின்றனர். அதேபோல் தண்ணீரும் குறைந்த அளவே சேகரமாகிறது. நான்குபுறமும் கரை அமைக்கும்போது தண்ணீர் சேமிப்பு அதிகரிப்பதோடு, ஆக்கிரமிப்பும் வராது, என்றார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x