Published : 23 Jul 2015 10:01 AM
Last Updated : 23 Jul 2015 10:01 AM

உயர் நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிகிறது: ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை அறிக்கை நாளை தாக்கல் - மீண்டும் கால அவகாசம் கேட்க சிபிசிஐடி முடிவு

ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை குறித்த அறிக்கை உயர் நீதிமன்ற கிளையில் நாளை (ஜூலை 24) தாக்கல் செய்யப்பட உள்ளது. அப்போது மீண்டும் கால அவகாசம் கேட்க சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரான ராமஜெயம் கடந்த 29.3.2012ம் தேதி கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கண்டறிவதற் காக குடும்பத்தினர், ரவுடிகள், அரசியல் பிரமுகர்கள், தொழிலபதிர்கள், நண்பர்கள் என ஏராளமானோரிடம் மாநகர போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனால் பலனில்லை.

இதையடுத்து ராமஜெயம் கொலை வழக்கு 2012 ஜூன் மாதம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் அவர்களாலும் குற்றவாளிகளை கண்டறிய முடியவில்லை. எனவே, இவ்வழக்கை சிபிஐ-க்கு மாற்ற உத்தரவிடக் கோரி ராமஜெயத்தின் மனைவி லதா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணையின்போது, குற்றவாளிகளைக் கண்டறிய சிபிசிஐடி போலீஸார் ஏற்கெனவே 2 முறை கால அவகாசம் கேட்டுப் பெற்றனர்.

கடைசியாக ஜூன் 12-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, ஜூலை 24-ம் தேதி வரை காலக்கெடு வழங்கி சிபிசிஐடி போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது.

இதையடுத்து குற்றவாளிகளை கண்டறிய சிபிசிஐடி டிஎஸ்பி மலைச்சாமி தலைமையில் 12 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஒருவேளை வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டால் சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைத் திறன் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிடும் எனக் கருதி, கெடு விதிக்கப்பட்ட காலத்துக்குள் குற்றவாளிகளை கைது செய்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இரவு பகலாக விசாரணை நடத்தி வந்தனர்.

உயர் நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடியும்நிலையில், நேற்றுவரை அவர்களால் குற்றவாளிகளைக் கைது செய்ய முடியவில்லை. அதேசமயம் வழக்கு விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, “ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமாக நடந்துவருகிறது. இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுவிட்டனர் என இப் போது கூற முடியாது. ஆனால், விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்கள் அடங்கிய அறிக்கை 24-ம் தேதி (நாளை) உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய் யப்பட உள்ளது” என்றனர்.

இதற்கிடையே, வழக்கு விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை சுட்டிக் காட்டி உயர்நீதிமன்ற கிளையில் மேலும் 2 மாதம் அவகாசம் கேட்க சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x