Published : 01 Aug 2019 04:32 PM
Last Updated : 01 Aug 2019 04:32 PM
தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் தோற்றுவிப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் ஆகஸ்ட் 9, 10-ம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி பெரிய மாவட்டமாக இருப்பதால் நிர்வாக வசதிக்காக இந்த மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும் என்று கடந்த 18-ம் தேதி சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அறிவித்தார்.
புதிய மாவட்டத்தைத் தோற்றுவிப்பது தொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் மு.சத்தியகோபால், பொதுமக்களிடம் கருத்து கேட்க உள்ளார்.
வருகிற 9-ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது தளத்தில் நடைபெறும் கூட்டத்தில் திருநெல்வேலி மற்றும் சேரன்மகாதேவி வருவாய் கோட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்புகள் மற்றும் பிற அமைப்புகளைச் சேர்ந்தோர் கலந்துகொள்ளலாம்.
பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் கூட்டம் நடைபெற உள்ளது.
மேலும், வருகிற 10-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்தில் தென்காசி வருவாய் கோட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்புகள் மற்றும் பிற அமைப்புகளைச் சேர்ந்தோர் கலந்துகொள்ளலாம்.
எழுத்து மூலமாகவோ, நேரிடையாகவோ கருத்து தெரிவிக்க விரும்புவோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT