Published : 31 Jul 2019 03:50 PM
Last Updated : 31 Jul 2019 03:50 PM
விருதுநகர் - மதுரை மாவட்ட எல்லைப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி. இங்குள்ள அருள்மிகு சந்தன மகாலிங்கம் மற்றும் சுந்தர மகாலிங்கம் திருக்கோயில்களில் ஆடி அமாவாசை திருவிழா இன்று(புதன்கிழமை) வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி மலையில் சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்காக விருதுநகர் சிவகாசி அருப்புக்கோட்டை காரியாபட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் திருமங்கலம் மதுரை பேரையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இப்பேருந்துகள் அனைத்தும் வத்திராயிருப்பு விலக்கு அருகே அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து சதுரகிரி மலை அடிவாரப் பகுதியான வண்டிப்பண்ணை வரை கட்டணம் இல்லா சிறப்பு பேருந்துகள் பக்தர்களுக்காக இயக்கப்பட்டன.
சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கருதி அவர்களது பெயர் விவரம் மற்றும் தொலைபேசி எண்ணுடன் குறியிடப்பட்ட ஸ்டிக்கர்கள் காவல்துறையினரால் தயார் செய்யப்பட்டு சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் கைகளில் ஒட்டி அனுப்பப்பட்டன.
சதுரகிரி மலை அடிவாரப் பகுதியான வண்டிப்பண்ணை நுழைவு வாயிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
தீப்பெட்டி மற்றும் போதை வஸ்துக்கள் போன்றவையும் கேரி பைகள் போன்றவையும் கொண்டு செல்ல தடை விதிக்கப் பட்டன. அதோடு தன்னார்வலர்கள் மூலம் மலையேறும் பக்தர்களுக்கு இலவசமாக குடிநீர் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டன.
இளந்தை குலத்தைச் சேர்ந்த ராமர் மற்றும் முத்துராமலிங்கம் ஆகியோர் சுமார் முப்பது கிலோ எடை உள்ள பல்வேறு மர விதைகளை மலையேறும் பக்தர்களுக்கு வழங்கினர்.
மலைப்பகுதியில் இவ்விதைகளை வீசிவிட்டு வந்தால் மழை விழும் பொழுது இவை துளிர்விட்டு வளரும் என்றும் அறிவுறுத்தி அனுப்பினார். மலைப்பாதையில் மாங்கனி ஓடை வழுக்குப் பாறை சங்கிலிப் பாறை நாவல் ஊற்று பிலாவடி கருப்பு குறித்த பகுதியில் கூட்ட நெரிசலை தடுக்க தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 65 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக பக்தர்களை மறியல் செய்தனர்.
ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு சதுரகிரி மலையில் உள்ள அருள்மிகு சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் திருக் கோயில்களில் சுவாமிக்கு பால் இளநீர் பன்னீர் தேன் சந்தனம் மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகம் நடைபெற்றது.
காலை 9 மணி முதல் பக்தர்களுக்கு கஞ்சி மற்றும் கலவை சாதம் அன்னதானமும் வழங்கப்பட்டது. இருப்பினும் அதிகாலையில் மலையேறிய பக்தர்கள் குடிநீர் கிடைக்காமலும் அன்னதானம் கிடைக்காமலும் தவித்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறாமல் திரும்பினர்.
மேலும் சதுரகிரி மலையில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்த தடை விதிக்கப்பட்டது. இதனால் அடிவார பகுதியிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்திவிட்டு மலை ஏறினார். ஆடி அமாவாசை திருவிழாவிற்காக நாளை மாலை நான்கு மணிவரை சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT