Published : 14 Jul 2015 09:52 AM
Last Updated : 14 Jul 2015 09:52 AM

அழகிரி மனைவி மீது நிலமோசடி வழக்கு பதிவு: முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

45 வயது நிரம்பியவரை மைனர் எனக் குறிப்பிட்டு நில மோசடி செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மனைவி காந்தி அழகிரி உள்ளிட்ட 4 பேர் மீது, மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் நில மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் காந்தி அழகிரி நேற்று மனு தாக்கல் செய்தார்.

மதுரை மாவட்டம், சிவரக்கோட்டையைச் சேர்ந்த ஆர். ராஜேஸ்வரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எனது கணவர் ராமமூர்த்தி. எங்கள் திருமணம் 1990-ம் ஆண்டில் நடைபெற்றது. அதன்பின் 13 ஆண்டுகள் பழநியில் வசித்தோம். பின்னர், சிவரக்கோட்டைக்கு திரும்பினோம்.

எனது கணவர் 45-வது வயதில் 2014-ல் இறந்தார். சிவரக் கோட்டையில் எனது கணவரின் மூதாதையர்களுக்கு சொந்தமான 25 சென்ட் நிலம் இருந்தது. அந்த நிலம் தொடர்பாக சார்பதிவாளர் அலுவலகத்தில் நான் வில்லங்கச் சான்றிதழ் பெற்றபோது, அந்த நிலம் தயா சைபர் பார்க் நிறுவன மேலாண்மை இயக்குநர் காந்தி அழகிரி பெயரில் இருந்தது. எனது கணவரை மைனர் எனக் குறிப்பிட்டு, எங்கள் குடும்பச் சொத்தை காந்தி அழகிரிக்கு விற்றுள்ளனர்.

இதுதொடர்பாக எனது மாமியார் திரவுபதி அம்மாள், கணவரின் சகோதரர் ராஜேந்திரனிடம் கேட்டேன். அந்த நிலத்தை விற்க எனது கணவர் சம்மதம் தெரிவிக்காததால், அவரை மைனர் எனக் குறிப்பிட்டு நிலத்தை விற்றதாக அவர்கள் தெரிவித்தனர். நிலத்தை வாங்கிய காந்தி அழகிரி செல்வாக்கு மிக்கவர். அவரை எதிர்த்து உன்னால் எதுவும் செய்ய முடியாது என்று மாமியாரும், ராஜேந்திரனும் மிரட்டினர்.

இதனால் இந்த நிலமோசடி தொடர்பாக மாமியார் திரவுபதி அம்மாள், கணவரின் சகோதரர் ராஜேந்திரன், புரோக்கர் பாண்டியராஜன் மற்றும் காந்தி அழகிரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கடந்த பிப்ரவரி 3-ல் மதுரை மாவட்டக் குற்றப்பிரிவு ஆய்வாளரிடம் புகார் அளித்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது புகாரின் பேரில் காந்தி அழகிரி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பி.கணபதி சுப்பிரமணியன் வாதிட்டார்.

மனுதாரர் புகாரின்பேரில் காந்தி அழகிரி உள்ளிட்ட 4 பேர் மீது 5 பிரிவுகளில் போலீஸார் வழக்குபதிவு செய்தி ருப்பதாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் தெரிவித்தார்.இதையடுத்து இந்த மனு பைசல் செய்யப்பட்டது.

இதற்கிடையே, நில மோசடிப் புகாரில் தன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் காந்தி அழகிரி நேற்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x