Published : 16 Jul 2015 09:19 PM
Last Updated : 16 Jul 2015 09:19 PM

ரூ.233.17 கோடியில் 6.15 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் பணி: முதல்வர் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் 6.15 லட்சம் மாணவர்களுக்கு இந்த ஆண்டில் ரூ.233.17 கோடியில் இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. சைக்கிள் விநியோகத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியர் அனைவருக்கும் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை கடந்த 2001-02ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.

அதன்பின், 2005-06ம் ஆண்டில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் அனைத்துப் பிரிவு மாணவ, மாணவியருக்கும் இத்திட்டத்தின் கீழ் சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2015-16 கல்வியாண்டில் பிளஸ் 1 படிக்கும் 6 லட்சத்து 15 ஆயிரத்து 518 மாணவ, மாணவியருக்கு ரூ.233.17 கோடியில் இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது.

இந்தப் பணியை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். திட்ட தொடக்கத்தின் அடையாளமாக 5 மாணவர்களுக்கு சைக்கிள்களை முதல்வர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். சைக்கிள்களை பெற்றுக்கொண்ட மாணவர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.









FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x