Published : 29 Jul 2019 09:26 PM
Last Updated : 29 Jul 2019 09:26 PM

ஐசரி கணேஷ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: குழந்தைகள், திருநங்கைகள் நலனுக்கு ரூ.10 லட்சம் செலுத்த ஒப்புதல்- வழக்கு முடித்துவைப்பு 

நடிகர் சங்க தேர்தல் பாதுகாப்பு வழக்கில் தலையிட்டதற்காக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் ஐசரி கணேஷ் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். தனது செயலுக்காக ரூ.10 லட்சம் அனாதை குழந்தைகள் நலனுக்கு உதவ ஒப்புக்கொண்டார். வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க கோரி விஷால் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்த ஜூன் 22-ல் விசாரித்தார். அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டாமென பொது செயலாளர் வேட்பாளரான ஐசரி கணேசும், அனந்தராமன் ஆகியோரும் நீதிபதியை அணுகியுள்ளனர்.

இதுதொடர்பாக இருவர் மீதும் தானாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட்டு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க ஜூன் 22-ல் உத்தரவிடப்பட்டது. இந்த அவமதிப்பு வழக்கு ஜூன் - 22 அன்று  நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஐசரி கணேஷ், அனந்தராமன் ஆகியோர் நேரில் ஆஜராகி பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் கோரினர்.

அதனையேற்ற நீதிபதிகள் வழக்கை ஜூலை 29  (இன்று)  ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஐசரி கணேஷ், அனந்தராமன் ஆகியோர் ஆஜராகி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனுத்தாக்கல் செய்தனர்.

ஐசரி கணேஷ் தரப்பில் இந்த விவகாரத்தில் தனக்கு தொடர்பில்லை என்றும், தன் பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அனந்தராமன் தரப்பில் ஐசரி கணேஷின் அனுமதிபெறாமல் அவரது பெயரை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவற்றை ஏற்ற நீதிபதிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர். அப்போது ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்காக நன்கொடையாளர் என்ற முறையில் சட்டப்பணிகள் ஆணையத்திற்கு உதவும்படி ஐசரி கணேஷிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதை ஏற்ற ஐசரி கணேஷ் 10 லட்ச ரூபாய் தருவதாகவும் அதை ஆதரவற்ற குழந்தைகள், திருநங்கைகள் நலனுக்காக பயன்படுத்திக்கொள்ளும்படியும் தெரிவித்தார்.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x