Last Updated : 29 Jul, 2019 05:18 PM

 

Published : 29 Jul 2019 05:18 PM
Last Updated : 29 Jul 2019 05:18 PM

தேனி மாவட்டத்தில் மலைமாடுகளுக்கான மேய்ச்சல் அனுமதி அட்டை வழங்குவதில் வனத்துறை தொடர்ந்து தாமதம்:  தீவனம் தர முடியாமல் விவசாயிகள் பரிதவிப்பு 

தேனி மாவட்டத்தில் மேய்ச்சல் அனுமதி அட்டை வழங்காமல் வனத்துறையினர் இழுத்தடித்து வருவதால் மலை மாடு வளர்ப்போர்க்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மலைமாடுகள் எனப்படும் நாட்டு மாடுகள் கூடலூர், கம்பம், நாராயணத் தேவன்பட்டி, கேகே.பட்டி, ராயப்பன்பட்டி, போடி, பெரியகுளம் என்று மலையடிவாரப்பகுதிகளில் அதிகளவில் வளர்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மேற்கு தெடர்ச்சி மலையடிவார கிராமங்களில் இதன் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. 

ஆண்டின் பெரும்பகுதி தீவனத்திற்காக மலைப்பகுதியிலே இவை இருப்பதால் மலைமாடுகள் என்று அழைக்கப்படுகிறது. இதற்காக பிரிட்டிஷ் காலத்தில் இருந்து மேய்ச்சல் அனுமதி வழங்கப்பட்டு வந்துள்ளது. 

மலையிலே தங்கி மேய்வதற்கு பட்டிபாஸ் என்றும் மாலையில் கீழிறங்கி வந்து விடுவதற்கு மேய்ச்சல்பாஸ் என்றும் தனித்தனியாக வழங்கப்படுகிறது. இதற்காக ஒரு மாட்டிற்கு ரூ.2, ரூ.4 என்று கட்டணம் பெறப்பட்டுள்ளது.

இருப்பினும் காலப்போக்கில் வனத்துறைச் சட்டங்களினால்  மலைமாடுகளை வனத்திற்குள் அனுமதிப்பதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

இந்நிலையில் தீவனப்பற்றாக்குறை, குறைந்து வரும் விவசாயம், இயந்திரமயமாகி விட்ட வேளாண்மை போன்ற பாதிப்புகளும் தொடர  மாடுகளை அதிகளவில் வளர்க்க முடியாத சூழ்நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டது.

இது குறித்து கர்னல் ஜான்பென்னிகுய்க் பாரம்பரிய மலைமாடுகள் வளர்ப்போர் சங்க தலைவர் சி.கென்னடி கூறுகையில், இந்த மாடுகள் ஜல்லிக்கட்டு, ஏர்உழவு, ரேக்ளாரேஸ் என்று பயன்படுத்தப்படுகிறது. இதன் சாணத்திற்காகவே அதிக எண்ணிக்கையில் வளர்க்கும் விவசாயிகளும் உண்டு. அந்தளவிற்கு இதில் சத்து உள்ளது. இயற்கை விவசாயத்தின் ஆணிவேராக இந்த மாடுகள் இருந்துள்ளது 1.25லட்மாக இருந்த இதன் எண்ணிக்கை தற்போது வெறும் 15ஆயிரமாக குறைந்து விட்டது என்றார்.

செயலாளர் ஏ.சுரேஷ்குமார் கூறுகையில், வனத்துறையினர் ஒவ்வொரு ஆண்டும் மேய்ச்சல் மாடுகளின் அனுமதி எண்ணிக்கையை வனத்துறை குறைத்துக் கொண்டே செல்கின்றது. 

கடந்த சில ஆண்டுகளாக 4ஆயிரத்தில் இருந்து தற்போது 2750ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது மலைமாடுகள் வளர்ப்போரிடைய கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே விவசாயம் பொய்த்துள்ள நிலையில் தீவனத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளால் அதிக விலை கொடுத்து வாங்க முடியவில்லை. பலரும் இந்த மாடுகளை ஒரு கவுரவத்திற்காகவே வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் மேய்ச்சலுக்கான அனுமதி காலம் கடந்த ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் இன்னமும் நடப்பாண்டிற்கான பாஸ் கொடுக்காமல் வனத்துறையினர் இழுத்தடித்து வருகின்றனர் என்றார்.

தற்போது இலவசமாகவே மேய்ச்சலுக்கான அனுமதி அட்டை வழங்கப்படுகிறது. ஆனால் இதைப் பெற பெரும்முயற்சி மேற்கொள்ள வேண்டியதுள்ளது. 

எனவே பாரம்பரியம் காக்க இந்த மலைமாடுகளை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x