Published : 10 Jul 2015 10:41 AM
Last Updated : 10 Jul 2015 10:41 AM

பொருட்கள் இல்லாத நியாயவிலைக் கடைகள் - உங்கள் குரல்: வாசகர்களின் புகார்கள்

‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட புகார்கள்:

அத்திப்பட்டு பகுதியில் பாதாள சாக்கடை தேவை

மணலி அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் தேங்கியுள்ளது. எனவே, இப்பகுதியில் உடனே பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

- ஜி.ஜெயச்சந்திரன்,எண்ணூர்

***

புரசை தாணா தெருவில் ஆக்கிரமிப்பால் அவதி

அயனாவரம், ஜமாலியா பகுதிகளுக்கு எளிதில் செல்ல புரசைவாக்கம் தாணா தெரு, குறுக்கு வழியாக பயன்படுத்தப்படுகிறது. அதனால் இத்தெருவில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நடைபாதைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், நடந்துசெல்லவே இடமில்லை. இங்கு நடைபாதை ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும்.

- கே.மனீஷ் அகமது, புரசைவாக்கம்

***

நிலத்தடி நீர், காற்று மாசு நடவடிக்கை தேவை

நன்மங்கலம் பேரூராட்சி பகுதியில் உருவாகும் குப்பைகள், நன்மங்கலம் ஏரியைச் சுற்றி கொட்டப்படுகின்றன. இதனால் ஏரி நீர், நிலத்தடி நீர் மாசுபடுகிறது. சில சமயத்தில் இந்த குப்பைகள் எரிக்கப்படுவதால் காற்றும் மாசுபடுகிறது. இதை தடுக்க குப்பை மேலாண்மை திட்டத்தை பேரூராட்சி நிர்வாகம் முறையாக செயல்படுத்த வேண்டும்.

- கே.ஆதிநாராயணன், நன்மங்கலம்

***

பாழாகும் மஞ்சள்நீர் கால்வாய்

செங்கல்பட்டு பகுதியில் உள்ள மஞ்சள்நீர் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு, கரையோரங்களில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளின் கழிவுகள் கால்வாயிலேயே விடப்படுகின்றன. இதனால் கால்வாய் மாசடைகிறது. மழைக் காலத்தில் கால்வாய் நீரை குடிநீராக பயன்படுத்த முடியவில்லை. எனவே, கரையோர ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கால்வாயை பாதுகாக்க வேண்டும்.

- எஸ்.சரவணன்,திம்மாவரம்

***

பரங்கிமலையில் இருந்து நேரடி பஸ் வசதி தேவை

கிண்டி கத்திபாரா மேம்பாலம் அமைக்கப்பட்டதில் இருந்து இப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனால், பரங்கிமலையில் இருந்து மீனம்பாக்கம், வடபழனி செல்ல சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள ஆசர்கானா பஸ் நிறுத்தத்துக்கு நடந்துவர வேண்டியுள்ளது. முதியவர்கள், குழந்தைகள் சிரமப்படுகின்றனர். எனவே, இப்பகுதியில் இருந்து நேரடி பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்.

- வி.சாரங்கபாணி,பரங்கிமலை

***

பொருட்கள் இல்லாத நியாயவிலைக் கடைகள்

அயனாவரம் பால் பண்ணை அருகில் 6 நியாயவிலைக் கடைகள் உள்ளன. இவற்றில் ஒரு பொருள் இருந்தால், மற்றொரு பொருள் இருப்பதில்லை. ஒவ்வொரு பொருளையும் வாங்க பலமுறை கடைக்கு செல்ல வேண்டியுள்ளது. வேலைக்குச் செல்பவர்கள் அவதிப்படுகின்றனர். இந்த கடைகளில் ஒரே நேரத்தில் அனைத்து பொருட்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சி.எஸ்.செல்வம்,அயனாவரம்

***

மதுக்கடையை இடம் மாற்ற கோரிக்கை

கல்பாக்கம் அடுத்த வெங்கம்பாக்கம் கிராமத்தில் ஈசிஆர் சாலையோரம் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இப்பகுதியில் பலர் போதையில் சாலையைக் கடக்கின்றனர். இதனால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்த மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை வேண்டும்.

- வாசகர்,கல்பாக்கம்

***

கால்வாயில் கழிவுநீரை கொட்டும் லாரிகள்

மதுரவாயல் - அம்பத்தூர் இடையே 200 அடி சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலைகள் உள்ளன. அதன் ஓரத்தில் கழிவுநீர்க் கால்வாய்கள் செல்கின்றன. வெளியூர்களில் வீடுகளில் இருந்து டேங்கர் லாரிகளில் கொண்டுவரப்படும் கழிவுநீர் இப்பகுதியில் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. இங்கு கழிவுநீர் கொட்டுவதை தடுக்க வேண்டும்.

- வாசகர்,மதுரவாயல்

***

ரேடியல் சாலையில் சிக்னல் பழுது

பல்லாவரம் ரேடியல் சாலையில் அதிக போக்குவரத்து காரணமாக விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இதை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் செயல்படாமல் உள்ளது. இதனால் வாகனங்கள் தாறுமாறாக சாலையை கடந்து செல்கின்றன. இந்த சிக்னலை செயல்பட வைத்து, விபத்து களை தடுக்க வேண்டும்.

- பி.எல்.நாச்சியப்பன்,குரோம்பேட்டை

அன்புள்ள வாசகர்களே..

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

044-42890002என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x