Published : 03 Jul 2015 08:21 AM
Last Updated : 03 Jul 2015 08:21 AM

தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் 2000 மெகாவாட் சூரியசக்தி மின்சாரம் கொள்முதல்: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உறுதி

தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் 2,000 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் என மாநில மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் 14-வது பசுமை எரிசக்தி தொடர்பான 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் சென்னையில் நேற்று தொடங் கியது. கருத்தரங்கை தொடங்கி வைத்து அமைச்சர் பேசிய தாவது:

தமிழகத்தில் பல ஆண்டு களுக்குப் பிறகு இந்த கோடை காலத்தில்தான் மின்வெட்டே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் மின் நிறுவு திறன் 13,586.44 மெகாவாட் அளவுக்கு உயர்ந்துள்ளது. காற்றாலை, சூரிய ஒளி, பயோகேஸ் மற்றும் இணை மின் உற்பத்தி மூலம் 8,482 மெகாவாட் நிறுவுதிறன் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சக்தி கொள்கை 2012-ல் வெளியிடப்பட்டது. அதன்படி, தற்போது மின்சார ஒழுங்குமுறை ஆணையம், சூரிய ஒளி மின் உற்பத்தி செய்யும் தனியார் துறையிடம் இருந்து ஒரு யூனிட் ரூ.7.01 என்ற விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஏற்கெனவே ஆண்டுக்கு 1000 மெகாவாட் என 3 ஆண்டுகளுக்கு 3,000 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி திறன் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில், இந்த ஆண்டு இறுதிக்குள் 2,000 மெகாவாட் மின் உற்பத்தி இலக்கு நிர்ணயித்து, அதை முழுமையாக கொள்முதல் செய்ய முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். எனவே, இந்த ஆண்டு இறுதிக்குள் 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் என நம்புகிறேன். முதல்கட்டமாக ஜூலை இறுதிக்குள் 1000 மெகாவாட் கொள்முதல் செய்ய ஒப்பந்தங்கள் போடப்படும். முதலீட் டாளர்கள் இதை பயன்படுத்தி தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும்.

தனி நபர் மின் நுகர்வைப் பொறுத்தவரை, அகில இந்திய அளவை (800 யூனிட்) காட்டிலும் தமிழகத்தில (1017 யூனிட்) அதிகமாக உள்ளது. எனவே, சூரிய மின் சக்தியை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

நிகழ்ச்சி முடிவில், அமைச்சரை சந்தித்த நிருபர்கள், ‘‘அதானி குழுமத்துடன் சூரிய சக்தி தொடர்பான ஒப்பந்தம் எப்போது போடப்படும்’’ என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், ‘‘விரைவில் ஒப்பந்தம் போடப்படும்’’ என தெரிவித்தார்.

கருத்தரங்கில், காற்றாலை மின்சக்தி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன், கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவன இயக்குநர் கே.வேணுகோபால், சிஐஐ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கவுன்சில் தலைவர் ரமேஷ் கைமள், சிஐஐ தென்மண்டல தலைவர் எஸ்.சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சோலார் பேனல் பொருத்துங்கள்

கருத்தரங்கில் தமிழக மின் துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி பேசும்போது, ‘‘வீட்டில் ஏசி வைத்திருப்பவர்கள், மேற்கூரையில் குறைந்தபட்சம் 1 கி.வோ சக்தியுள்ள சோலார் பேனல் பொருத்துங்கள். இதற்கு தமிழக அரசு சார்பில் ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் மின் கட்டணம் வெகுவாக குறையும். வர்த்தக, வணிக நிறுவனங்கள் ‘மின் தணிக்கை’ நடத்த வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x