Published : 30 May 2014 01:00 PM
Last Updated : 30 May 2014 01:00 PM

மோடி வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டார்: தமிழக மீனவ அமைப்புகள் அதிருப்தி

மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற பாஜக அரசு தவறிவிட்டதாக மீனவ அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

ராமேஸ்வரத்தில் 11 மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை (மே 28, 2014) அன்று நடைபெற்றது. இதில், பல ஆண்டுகளாக சிறையிலிருந்த, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் உள்பட தமிழக மீனவர்கள் 14 பேரை, இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்ததற்கு உதவி செய்த பாஜக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், ’மீனவர் நலனில் பாஜக அரசு நல்ல முடிவினை மேற்கொள்ளும் என்றும் தமிழக மீனவர்களை காக்க வழிவகை செய்யும் என்றும் பெரிதாக எதிர்ப்பார்த்தோம். ஆனால் பாஜக அரசு, மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் தற்போது எங்களை ஏமாற்றிவிட்டது.

கடந்த ஜனவரி மாதம் ராமேஸ்வரத்தில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட கடல் தாமரை மாநாட்டில், பாஜக ஆட்சி அமைத்தால் மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க தனியாக மீனவர் நலத்துறை என்னும் இலாகா உருவாக்கப்படும் என்று சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்தார். ஆனால் தற்போது தனி அமைச்சகத்திற்கான எந்த நடவடிக்கையையும் இந்த அரசு எடுக்காதது மிகுந்த வருத்தமளிப்பதாக உள்ளது.

இதே போல, தமிழக பாஜக தலைவர்களான பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் இல.கணேசன் ஆகியோர் இது குறித்து முயற்சிகளை எடுக்காதது மிகுந்த அதிர்ச்சி தரும் விஷயமாக உள்ளது. மீனவர் நலனைக் காக்க, எங்களுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும்’ என்று இந்த கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே, அப்பாவி மீனவர்கள் விடுதலை கூட்டணியின் தலைவர் அருளாநந்தம், இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 84 இலங்கை மீனவர்கள், தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை இந்திய அரசு உடனடியாக விடுதலை செய்ய முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x