Published : 08 Jul 2015 08:33 AM
Last Updated : 08 Jul 2015 08:33 AM

கொள்ளை வழக்கில் திருப்பம்: 110 பவுனை பையில் போட்டு கதவில் தொங்கவிட்ட மர்ம ஆசாமி - துப்பு துலக்க முடியாமல் திணறும் போலீஸ்

திருவண்ணாமலையில் 120 பவுன் நகை கொள்ளைபோன வழக்கில் திடீர் திருப்பமாக, கொள்ளை நடந்த வீட்டின் முன் பக்க கதவில் 110 பவுன் நகையை பையில் போட்டு மாட்டிவிட்டு சென்றவர் குறித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை கொசமடத் தெருவில் வசிப்பவர் ஆனந்தன். இவரது வீட்டில் கடந்த 2-ம் தேதி காலை நுழைந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 120 பவுன் நகை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து திருவண்ணாமலை நகர போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். 3 தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனந்தன் கடையில் பணியாற்றி வந்த 5 பெண்கள் உட்பட 19 பேர் மற்றும் வீட்டுக்கு வந்து சென்ற நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கடந்த 4 நாட்களாக தனிப்படை போலீஸ் நடத்தி வந்த விசாரணையில், எந்த முன்னேற்றமும் இல்லை. வீட்டின் எதிரே உள்ள கனரா வங்கியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தும் பலனில்லை. துப்பு கிடைக்காமல் போலீஸார் திணறி வந்த நிலையில், திடீர் திருப்பமாக 110 பவுன் கிடைத்துள்ளது. ஆனந்தன் வீட்டின் முன் பக்க கதவில், நேற்று அதிகாலை ஒரு பை மாட்டப்பட்டிருந்தது. வீட்டின் கதவை திறந்த, அவரது மனைவி விஜயலட்சுமி, பையை பார்த்துள்ளார். அதில், கொள்ளை போனதாக கூறப்பட்ட தங்க நகைகள் இருந்துள்ளன.

இதையறிந்து, ஆனந்தன் வீட்டுக்குச் சென்ற தனிப்படை போலீஸார், நகைகளை பார்வை யிட்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து, நகைகளை எடை போடும் பணியில் தனிப்படை போலீஸார் ஈடுபட்டனர். அதில், 110 பவுன் இருந்தது தெரிய வந்தது. நகை மாடல் மற்றும் எடை வாரியாக குறிப்பெடுத்து, புகைப்படமும் எடுக்கப்பட்டது. நகைகள் தானாக கிடைக்கப்பெற்றுள்ள சம்பவத்தில் மர்மம் நீடிக்கிறது. ஆனந்தன், அவரது மனைவி விஜயலட்சுமியை நகர காவல் நிலையத்துக்கு வரவழைத்து நேற்று விசாரணை நடத்தினர். அதேபோல், 19 தொழிலாளர்களிடமும் விசாரித்துள்ளனர்.

கொள்ளைபோனதாக கூறப்பட்ட 120 பவுனில் 110 பவுன் நகை திரும்ப கிடைத்தாலும், போலீஸார் நிம்மதி அடையவில்லை. அதனை கொண்டு வந்து, கதவில் மாட்டியவர்கள் யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x