Published : 29 Mar 2014 08:08 AM
Last Updated : 29 Mar 2014 08:08 AM

வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்: பிரவீண்குமார் ஆலோசனை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக தேர்தல் துறையினர் செய்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஒன்பது கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏப்ரல் 24-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று (சனிக் கிழமை) தொடங்குகிறது.

வரும் ஏப்ரல் 5-ம் தேதி வரை மனுத்தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்களை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தாக்கல் செய்யலாம். வேட்புமனுத்தாக்கல் செய்வோர், விருப்பம் இல்லாவிட்டால் நேரில் வரவேண்டிய அவசியம் இல்லை. அதற்கான வழிவகை இம்முறை செய்யப்பட்டுள்ளது. நீதிபதி, பிரமாண ஆணையர் அல்லது நோட்டரி பப்ளிக் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திட்டு, அந்த ஆவணத்தை தன்னை முன்மொழிபவரிடம் மனுதாரர் கொடுத்து அனுப்பலாம்.

விதிமுறைகள் என்ன?

மனுத்தாக்கல் செய்ய வருவோர் தங்களுடன் அதிகபட்சம் 5 பேர் வரை அழைத்து வரலாம். வாக்குச்சாவடி அமைந்துள்ள 100 மீட்டர் எல்லைக்குள் 3 வாகனங்களுக்கு மேல் அவருடன் வரக்கூடாது. பொதுப்பிரிவைச் சேர்ந்த வேட்பாளர்கள் ரூ.25 ஆயிரம் டெபாசிட் தொகை செலுத்தவேண்டும். எஸ்.சி/எஸ்.டி. பிரிவினர் அதில் பாதித்தொகை செலுத்தினால் போதுமானது. வேட்பாளரின் பெயரும், அவரை முன்மொழிவோர் பெயரும் வாக்காளர் பட்டியலில் கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும். மனுத்தாக்கல் செய்பவர், 25 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தால் மனுத்தாக்கல் செய்பவரை, ஒரு நபர் மட்டும் முன்மொழிந்தால் போதுமானது. மற்றவர்களுக்கு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 10 பேர் முன்மொழிய வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கவுள்ள நிலையில், தென் மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரி களுடனும், இந்திய தேர்தல் ஆணைய துணை ஆணையர் பாலகிருஷ்ணனுடனும் ஒரே நேரத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், வீடியோ கான்பரன்சிங் மூலம் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயல கத்தில் உள்ள அவரது அறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்தியேக வசதி மூலம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

போலீஸ் அதிகாரிகள்

ஆலோசனைக் கூட்டத்தின்போது தேரதல் பிரிவு கூடுதல் டிஜிபிக்கள் சேஷசாயி, டி.கே.ராஜேந்திரன் ஆகியோரும் இருந்தனர். இக்கூட்டத்தில் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும், கவனிக்கத்தக்க வாக்குச்சாவ டிகளின் எண்ணிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x