Published : 27 Jul 2019 10:55 AM
Last Updated : 27 Jul 2019 10:55 AM
எதிர்க்கட்சிகளின் எந்த கருத்துகளையும் கேட்காமல் சட்ட மசோதாக்களை பெரும்பான்மை பலத்தால் மட்டுமே நிறவேற்றிவரும் மத்திய அரசு ஒரு மோசமான முன்னுதாரணமாகத் திகழ்கிறது என சாடியுள்ளார் திமுக எம்.பி. கனிமொழி.
நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் சமீபத்தில் திமுக மகளிர் அணி நிர்வாகியும் முன்னாள் மேயருமான உமாமகேஸ்வரி அவரது கணவர் மற்றும் அவர்கள் வீட்டில் பணி செய்து வந்த பணிப்பெண் மாரி உள்பட 3 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் திமுக செயற்குழு உறுப்பினர் வி.எஸ். கருணாகரன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவ்விரு சம்பவங்களில் உயிரிழந்த திமுக கட்சி நிர்வாகிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி. தூத்துக்குடிக்கு இன்று விமானம் மூலம் வந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வரும் சட்ட மசோதாக்கள் மீது எதிர்க்கட்சிகள் கூறும் கருத்துகளை கவனத்தில் கொள்ளாமலும், நிலைக்குழுவுக்கு அனுப்பாமலும் அவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள்.
எதிர்க்கட்சிகள் இதைக் கண்டித்த பிறகும் அவர்கள் எந்தவித கருத்து கேட்கும் கூட்டத்தையும் நடத்தாமல் தனக்கு இருக்கக்கூடிய பெரும்பான்மையான பலத்தைக் கொண்டு சாதித்துவிட வேண்டும் என செயல்படுகிறார்கள். இது ஒரு மோசமான முன்னுதாரணம்" என்றார்.
தூத்துக்குடியில் நிலவும் தண்ணீர் பிரச்சினை குறித்த கேள்விக்கு, "தமிழகத்தில் நிலவிவரும் தண்ணீர் பிரச்சனை குறித்து தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் எழுப்பிவருகிறது. அமைச்சர்களும் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று சொல்கிறார்களே தவிர இதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விரைவில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி வரும். அப்போதுதான் இதற்கு நிரந்தர தீர்வை நாம் காண முடியும்" என்றார்.
சட்டம், ஒழுங்கு இருக்கிறதா?
தமிழகாத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை குறித்த கேள்விக்கு, "தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. படுகொலைகள் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆணவக் கொலைகள் அதிகரித்து கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையையும் காணமுடிகிறது. இந்த நிலையில் சட்டம் ஒழுங்கு இருக்கிறது என்று நாம் எப்படி சொல்ல முடியும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT