Published : 08 Jul 2015 03:32 PM
Last Updated : 08 Jul 2015 03:32 PM

ராமநாதபுரத்தில் ஒரு கபடி கிராமம்: காவல், ராணுவப் பணிகளில் சேர ஆர்வம் காட்டும் இளைஞர்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வீட்டுக்கு ஒருவர் கபடி வீரராக இருப்பதுடன், ராணுவம் மற்றும் காவல்துறை சார்ந்த சீருடைப் பணிகளில் சேர அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

முதுகுளத்தூர் அருகே உள்ளது ஏனாதி கிராமம். சுமார் 300 குடும்பங்கள் வசிக்கும் இந்த ஊரைச் சுற்றிலும் கருவேல மரங்கள் படர்ந்திருக்க ‘கபடி கபடி’ என சிறுவர் முதல் பெரியவர் வரை ஒலிக்கும் குரல்கள் புதிதாக ஊருக்குள் நுழைபவர்களை வரவேற்கிறது.

இதுபற்றி ஏனாதியைச் சேர்ந்த வழக்கறிஞரும், கபடி வீரருமான முருகபூபதி கூறியதாவது:

எங்கள் கிராமத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வயல்களில் கூலி வேலை செய்பவர்கள், அரசு பணியாளர்கள் என வீட்டுக்கு வீடு கபடி வீரர்கள் உள்ளனர்.

சிறு வயதில் இருந்தே கபடி விளையாட்டில் ஆர்வம் காட்டுவதால், உடலை வலுவாக்கி ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்கின்றனர். இதன்மூலம் காவல் துறை, ராணுவம் போன்ற சீருடைப் பணிகளில் சேர இளைஞர் களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. மேலும் சிலர் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் உயர் கல்வியில் சேர்ந்து படித்து வருகின்றனர். ஏனாதியில் இருந்து 20 பேருக்கு மேல் ராணுவத்திலும், 45 பேருக்கு மேல் காவல் மற்றும் தீயணைப்புத்துறையிலும் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.





இளம் தலைமுறையினருக்கு ஆர்வம் ஏற்பட மாவட்ட, மாநில அளவில் கபடிப் போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பெற்ற கோப்பைகளை எங்கள் ஊர் சமுதாயக் கூடத்தில் காட்சிக்கு வைத்திருக்கிறோம்.

ராமநாதபுரம் என்றாலே வறட்சியான மாவட்டம் என்றும் சாதி மோதல்கள் அதிகம் நடக்கும் பகுதி என்றும் அனைவரும் நினைக்கின்றனர். ஆனால், எங்களுக்கு கபடி விளையாட்டில் போதிய பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் இருந்தால் தேசிய அளவிலும் சாதனை படைத்து ஏனாதியின் பெயரை உலகறியச் செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x