Published : 26 Jul 2019 10:51 AM
Last Updated : 26 Jul 2019 10:51 AM

வெட்டப்பட்ட குளங்கள் விரட்டப்பட்ட வறட்சி!

இரா.கார்த்திகேயன்

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில்  மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல குக்கிராமங்களில் விவசாயம்தான் வாழ்வாதாரம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய கடும் வறட்சியால் விவசாயம் நொடித்துப்போக, விவசாயிகள் செய்வதறியாது திகைத்தனர்.

இதனால், திருப்பூர் மற்றும் காங்கயத்தில் உள்ள பின்னலாடை நிறுவனங்களுக்கும், அரிசி மற்றும் எண்ணெய் ஆலைகளுக்கும் கூலி வேலைக்குச் சென்று, குடும்பத்தைக் காப்பாற்றினர். மக்களுக்குக் குடிக்கவே தண்ணீர் இல்லாத சூழலில், உழவின் உயிரான கால்நடைகளுக்கு எப்படி தண்ணீர் கிடைக்கும்? இதனால்,  பலரும் கால்நடைகளை சந்தைகளில் விற்றுவிட்டனர். இதற்குப் பிறகே, அப்பகுதியில் நிலவும் வறட்சியின் கோரத்தை அனைவரும் உணரத் தொடங்கினர்.

வறட்சியை சமாளிக்கும் வகையில், வெள்ளகோவில் பகுதியில் உள்ள, சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக அறங்காவலர்  கார்த்திகேய சிவசேனாபதி,  வள்ளியரச்சலில் ஊரில் 4.30 ஏக்கரில், சுமார் 20 அடி ஆழத்தில் இரண்டு குளங்களை வெட்டினார். ஆண்டுதோறும் கிடைக்கும்  கீழ்பவானி பாசன நீர் மூலம் இந்தக் குளங்கள் நிரப்பப்படுகின்றன.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீர் தேங்குவதால்,  அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக உயருகிறது. வாடிய பயிர்கள் மெதுவாக உயிர்பிடித்து, துளிர்விடுகின்றன. இது விவசாயிகளின் மனங்களிலும் படரவே, நிறுவனங்கள் மற்றும் ஆலைகளில் கூலி வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டு, மீண்டும் விவசாயத்துக்குத் திரும்புகின்றனர்.

பல தலைமுறை மூச்சு!

இடைக்காட்டு வலசு கிராமத்தை சேர்ந்த சி.செந்தில்குமார் கூறும்போது, “வாழை, தென்னை, கரும்பு, கத்தரி, நெல், எள்ளு ஆகியவைதான் எங்களின் பிரதானப் பயிர்கள். கீழ்பவானி பாசன நீர்தான் எங்கள் விவசாயத்தின் பல தலைமுறை மூச்சாக இருந்து வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கடும் வறட்சியால், பலர் விவசாயத்தை விட்டே வெளியேறினர். தண்ணீரின்றி பயிர்கள் காய்ந்து, பல குடும்பங்கள் கந்துவட்டிக்கு பணம் பெற்று,  குடும்பத்தை நகர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

நிலத்தடி நீர்மட்டம் ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அதலபாதாளத்துக்குச்  சென்றுவிட்டதால், பல லட்சம் செலவு செய்து ஆழ்குழாய்க் கிணறு அமைத்தனர். ஆனால் அதில் தண்ணீர் இல்லாததால் ஏமாற்றமே மிஞ்சியது. இன்றைக்கு இங்கு வெட்டப்பட்டுள்ள இரண்டு குளங்களில் கீழ்பவானி நீர் தேக்கப்பட்டிருப்பதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, கிணற்றிலும் தண்ணீர் கீழே இறங்காமல் உள்ளது. இதனால் விவசாயம் தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது.

வள்ளியரச்சல் மட்டுமின்றி, இடைக்காட்டு வலசு, வடுகபாளையம், வயல்காளிபாளையம் ராமசாமிபுரம், குழவிபாளையம் என சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் செறிவூட்டப்பட்டு, தற்போது  மீண்டும் விவசாயம் செய்யத் தொடங்கியுள்ளோம்” என்றார்.

ஊரின் மூத்த விவசாயி வே.செல்லமுத்து கூறும்போது, “எங்கள் பகுதியில் கீழ்பவானி பாசன நீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வந்தோம். ஆனால், தென்னை,கரும்பு போன்ற பயிர்களுக்கு தண்ணீர் எப்போதும் தேவைப்பட்டதால், ஆழ்குழாய் அமைக்க முடியாதவர்கள், டிராக்டர்களில் தண்ணீர் வாங்கி ஊற்றி விவசாயம் செய்தோம்.  

இந்த செலவே பல லட்சங்களைத் தொட்டது. அந்த அளவுக்கு வறட்சி வாட்டிவதைத்தது. ஆழ்குழாய்க் கிணறு  அமைத்தபோதும்,  தண்ணீர் இல்லாததால் நம்பிக்கை தகர்ந்தது. இந்த நிலையில், இரண்டு குளங்கள் வெட்டியதால், எங்கள் வறட்சியும், துயரமும் விரட்டப்படுகிறது. தற்போது கரும்பும், நெல்லும் பயிரிட்டு வருகிறோம்” என்றார். 

பொறியியல் பட்டதாரியான சந்தோஷ்குமார் கூறும்போது, “நான் படித்துக் கொண்டிருந்தபோது தண்ணீரின்றி, பலர் விவசாயம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இரண்டு குளங்கள் வெட்டியதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து,  ஊரில் விவசாயம் செய்வது என  முடிவு செய்துள்ளேன். நீர்மேலாண்மை இருந்தால் மட்டுமே விவசாயம் செழிப்பாகும் என்ற நிலைதான் தற்போது நாடு முழுவதும் உள்ளது. மழைநீரை சேமிக்க தவறவிடுகிறோம். இனியாவது மழை நீரை சேமிக்க வேண்டும்” என்றார்.

வறட்சியை தகர்த்தோம்!

இந்த நிலையில், குட்டப்பாளையத்தில் மூன்றரை ஏக்கரில் குளத்தை வெட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் கார்த்திகேய சிவசேனாபதி கூறும்போது, “எங்கள் பகுதியில் வறட்சியை விரட்டும் சிறிய முயற்சியாகத்தான் இதைத் தொடங்கினோம். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு  2  குளங்களை மூன்று மாதங்களில் வெட்டி, கரையைப் பலப்படுத்தும்  வகையில் மரக்கன்றுகளை நட்டோம். ஜப்பானின் மியாவாக்கி முறையில், குறுகிய பரப்பில் 45 வகையான, 250 மரக்கன்றுகள் நடப்பட்டன. நம்மாழ்வார் சொல்லியபடி, சாணி உருண்டையை தயார் செய்து, மரங்களின் கீழே போட்டு வளர்க்கிறோம். இதனால் மரங்களுக்கு அதிக நீர் செலவாகாது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், மரங்கள் அடர்த்தியாக இருப்பதால், பறவைகளும், பட்டாம்பூச்சிகளும் வலசை வருகின்றன.

 தற்போது, சுற்றுவட்டாரக்  கிராமங்களில் விவசாயத்தை நம்பி வாழும் பலர், இந்த குளங்களால் பயன்பெறுகிறார்கள். மேலும், விவசாயிகள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து, குட்டப்பாளையத்தில் மூன்றாவது குளத்தை வெட்டி வருகிறோம். இதன் மூலம்  அர்ஜுனாபுரம், குட்டப்பாளையம்  உட்பட கிராமங்கள் பயனடையும்” என்றார் நெகிழ்வுடன் கார்த்திகேய சிவசேனாபதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x