Published : 25 Jul 2019 12:35 PM
Last Updated : 25 Jul 2019 12:35 PM
நாடு முழுவதிலும் கடந்த 6 மாதங்களில் கொசுக்களால் ஏற்படும் நோய்களால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 6,210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களவையில் மத்திய அரசு இத்தகவலைத் தெரிவித்துள்ளது.
கொசுக்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களில் நான்கு, தென்னிந்தியாவைச் சேர்ந்தவை என்னும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதில் கேரளாவில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்; 469 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 988 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் 1,303 பேரும் தெலங்கானாவில் 767 பேரும் கொசு சார்ந்த நோய்களால் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
கொசு சார்ந்த நோய்கள் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்னால் கொசுக்கள் குறித்து அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். கொசு மிகவும் பழமையான உயிரினத்தில் ஒன்று. சுமார் 22.6 கோடி ஆண்டுகளுக்கு முன்னதாக கொசு உருவானதாக வரலாறு கூறுகிறது. நவீன கால கொசுக்கள் வகை, சுமார் 7.9 கோடி ஆண்டுகள் பழமையானவை.
சுமார் 3,500 பறக்கும் சிறிய பூச்சி வகைகளில் ஒன்று கொசு. கொசுக்களில் மட்டும் 112 வகைகள் உள்ளன. இதன் வாழ்க்கை சுழற்சி, முட்டை (Egg), இளவுயிரி (லார்வா புழு), கூட்டுப்புழு (Pupa), மூதுயிரி (Adult) என 4 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.
பொதுவாக மனிதர்கள், விலங்குகளைக் கடிக்கும் இயல்பைக் கொண்டவை கொசுக்கள். நம்மிடம் இருந்து ரத்தத்தை உறிஞ்சிய பெண் கொசுக்கள், ரத்தத்தின் மூலமே முட்டையிடத் தேவையான புரதத்தைப் பெறுகின்றன. அதைக்கொண்டு மனிதர்கள் மற்றும் கால்நடைகள் வாழும் பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரில் கொசுக்கள் முட்டையிடுகின்றன. டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களுக்குக் காரணமான கொசுக்கள் நன்னீரில் உற்பத்தியாகின்றன.
கொசு அதிகம் உற்பத்தியாகும் இடங்கள்
தேங்கியுள்ள நீர்நிலைகள்
திறந்து கிடக்கும் சாக்கடைகள்
வடியாமல் இருக்கும் மழைநீர்
குப்பைத்தொட்டிகள்
மூடப்படாத நீர்ப் பாத்திரங்கள், செக்கு, அம்மிகள்.
ஆண் கொசுக்களின் ஆயுட்காலம் 1 வாரம், பெண் கொசுக்களின் ஆயுட்காலம் 1 மாதம் என்றாலும் இனப்பெருக்கத்தில் நூற்றுக்கணக்கான முட்டைகளை பெண் கொசுக்கள் இடுகின்றன. அவற்றில் இருந்து ஏராளமான கொசுக்கள் உருவாகின்றன. இதனால் கொசுக்களின் உற்பத்தி பலமடங்கு அதிகரிக்கிறது.
கொசுக்கள் கடிக்கும்போது வெளியாகும் உமிழ்நீர் நம் தோலில் அரிப்பையும் தடிப்பையும் ஏற்படுத்துகிறது. சில வகைக் கொசுக்களுக்கு நோயை ஏற்படுத்தும் தன்மையும் உண்டு. கொசுக்கள் கடிக்கும்போது பரவும் வைரஸ், பாக்டீரியாக்களால் ஏராளமான நோய்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக மலேரியா, சிக்கன் குனியா, டெங்கு காய்ச்சல், ஜிகா காய்ச்சல் உள்ளிட்ட பலவகை நோய்களுக்கு கொசுக்களே அடிப்படைக் காரணமாக அமைகின்றன.
கொசுவால் உயிரிழப்பு
ஆண்டுதோறும் சுமார் 70 கோடி மக்கள், கொசுவால் சார்ந்த உடல்நலக் குறைவுகளுக்கு ஆளாகின்றனர். இதனால் சுமார் 1 கோடிப் பேர் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிக்கைப்படி, கடந்த ஆண்டு 85 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
தற்போது தென்மேற்குப் பருவ மழை தொடங்கி, சென்னை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் பெய்துவருகிறது. சாலைகளிலும் தெருவோரங்களிலும் தண்ணீர் தேங்கியிருப்பதையும் காண முடிகிறது. தேங்கியுள்ள நீர்ப்பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியாக அதிக வாய்ப்புள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்க உள்ள நிலையில், சென்னை மாநகராட்சி கொசுக்களைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்பதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் பேசினோம்.
''மாநகராட்சி சார்பில் 3,500 டிபிசி ஊழியர்கள் இதற்கெனத் தனியாகப் பணியாற்றி வருகின்றனர். சுகாதாரத்துறை மூலமாக துப்புரவு ஆய்வாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேங்கியுள்ள நீரை இறைக்கச் சொல்வது, தேவையற்ற பொருட்களை குப்பைத் தொட்டிகளில் போடுவது ஆகிய செயல்களை முடுக்கி விட்டுள்ளோம்.
இப்போது டெங்கு சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவும் இல்லை. மெட்ரோ குடிநீர் வாரியத்திடம் குளோரின் கொண்டு, தண்ணீரைச் சுத்திகரிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். ’திட்டம்500’ என்ற பெயரில், சென்னையில் ஒவ்வொரு பகுதியையும் 500 வீடுகள் கொண்டதாகப் பிரித்துள்ளோம். ஒவ்வொரு 500 வீடுகளுக்கும் ஒரு மலேரியா பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கூவம் ஆற்றின் துவாரங்களைத் திறந்து அடிக்கடி சுத்தப்படுத்துகிறோம். ஆற்றில் நீர் பாய்ந்தோடுவதை உறுதிப்படுத்தினால் போதும். பொதுப்பணித் துறையுடன் இணைந்து இதற்காகப் பணியாற்றுகிறோம்.
மக்களின் ஒத்துழைப்பு தேவை
பொதுமக்கள் மத்தியிலும் போதுமான அளவு விழிப்புணர்வு ஏற்படவேண்டும். தங்கள் வீட்டு மொட்டை மாடிகள், சுற்றுப்புறங்களில் கிடக்கும் தேவையில்லாத பொருட்களை அகற்றி சுத்தமாக வைத்திருக்கவேண்டும். இதுதவிர ஒரு சில இடங்களில் மாநகராட்சி ஊழியர்களை வீட்டுக்குள்ளும் வளாகத்துக்கு உள்ளேயும் விடுவதில்லை என்று புகார் எழுகிறது. கொசுக்கள் தங்கு, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் ஆகியவற்றுக்குக் கீழ் உள்ள இடங்கள் ஊழியர்களுக்கே நன்றாகத் தெரியும். அதனால் ஊழியர்கள் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்'' என்கிறார் ஆணையர் பிரகாஷ்.
தமிழகத்தில் 2018-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கொசுவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 98 ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு ஜூனில் இந்த எண்ணிக்கை 1,000 ஆக உயர்ந்துள்ளது என்று மாநிலங்களைவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அரசு அதிகாரிகளை மட்டுமே சார்ந்து, எதிர்பார்த்துக் காத்திருக்காமல் மக்களும் தங்களால் ஆன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வீட்டைச் சுற்றியுள்ள காலி இடங்களில் கிடக்கும் டயர்கள், குப்பைகள், கவர்களை அப்புறப்படுத்தவேண்டும். வீட்டில் உள்ள குடிநீர்ப் பாத்திரங்களை சரியாக மூடிவைக்க வேண்டும். கொசுக்கள் வந்தபின் நடவடிக்கைகள் எடுப்பதைவிட, வருமுன் காப்போம். நலமுடன் வாழ்வோம்.
- க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT