Published : 11 May 2014 11:00 AM
Last Updated : 11 May 2014 11:00 AM
மத்திய அரசு நிதி உதவியுடன் தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 2,000 புதிய பஸ்கள் வாங்கப்படவுள்ளன. இந்த பஸ்கள் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வரும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் அடுத்த 15 ஆண்டுகளில் நகரங்களில் வசிப் போரின் எண்ணிக்கை 2 மடங்காக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு 2005-ம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
இத்திட்டத்தின் மூலம் பெரிய நகரங்களின் உள்கட்டமைப்பு, ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதி போன்றவற்றுக்கு நிதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிதி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரிய நகரங்களுக்கு சுழற்சி முறையில் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின்படி 2014ம் ஆண்டில் பல்வேறு மாநிலங்கள் 10 ஆயிரம் பஸ்களை வாங்க மத்திய அரசு நிதி வழங்க உள்ளது.
பஸ்கள் வாங்குவதற்கான மொத்த நிதியில் 35 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும். மீதமுள்ள 65 சதவீத நிதியை மாநில அரசும், போக்குவரத்துக் கழகங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 2000 புதிய பஸ்கள் அளிக்கப்படவுள்ளன.
இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழகங்களின் உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘‘2014-ம் ஆண்டில் தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மொத்தம் 2000 புதிய பஸ்கள் வாங்க மத்திய அரசு நிதி உதவி அளிக்கவுள்ளது. அதன்படி, சென்னை, மதுரை, கோவை நகரங்களில் பஸ்கள் வாங்க நிதி அளிக்கப்படும். மேலும், இத்திட்டம் மூலம் பயன்பெறும் நகரங்களின் எண்ணிக்கையும் 28-ல் இருந்து 66 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், தமிழகத்தில் மேலும் சில நகரங்களுக்கு புதிய பஸ்களை வாங்க நிதி கிடைக்கும். இந்த நிதி வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் முதல் கிடைக்கும். இதைத்தொடர்ந்து புதிய பஸ்கள் வாங்கப்படும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT