Published : 24 Jul 2019 12:41 PM
Last Updated : 24 Jul 2019 12:41 PM
மதுரை அருகே திருநகரில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள வீடு, கார், 90 பவுன் தங்க நகைகளை அபகரித்துவிட்டு பெற்றாரை முதியோர் இல்லத்தில் சேர்த்த மகள்களிடம் இருந்து அவற்றை மீட்டுக் கொடுத்துள்ளார் திருமங்கலம் கோட்டாட்சியர். மேலும், பாதிக்கப்பட்ட முதியவர்களின் மகள்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள திருநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் அழகர்சாமி(வயது 72). இவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இவருக்குச் சொந்தமாக ரூ.70 லட்சம் மதிப்புள்ள வீடு, கார், 90 பவுன் நகைகள் இருந்துள்ளன. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள், பெற்றோரிடம் இருந்து வீடு, கார், நகைகளை அபகரித்துவிட்டு, வயதான காலத்தில் அவர்களை அரவணைக்காமல் திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டுள்ளனர்.
வயதான அழகர்சாமி தம்பதியினர் மகளிடம் இருந்து சொத்துக்களை பெற முடியாமல் தவித்தனர். இந்நிலையில் அழகர்சாமி தம்பதியினர், தங்கள் மகள்கள் சொத்துகளைப் பறித்துக்கொண்டு தங்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டதாக தமிழ்நாடு மூத்த குடிமக்கள் நல ஆணையத்தில் புகார் செய்தனர்.
மதுரை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கோட்டாட்சியர் முருகேசன் விசாரணை மேற்கொண்டார். அழகர்சாமியின் மகள்களிடம் விசாரித்தார். ஆனால், மகள்களோ சொத்துகளை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை. அதனால், ஒரு வாரத்திற்கு விசாரைணக்கு வருமாறு சொத்துகளைப் பறித்த மகள்களுக்கு கோட்டாட்சியர் முருகேசன் நோட்டீஸ் வழங்கினார்.
நேற்று மாலை, மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திருமங்கலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சொத்துகளை பறித்த அழகர்சாமி மகள்களிடம் விசாரணை நடத்தினார். பெற்றோரை கவனிக்காமல் விட்டதோடு சொத்துகளையும் பறித்த 2 மகள்களிடமும் இருந்துரூ.70 லட்சம் மதிப்புள்ள வீட்டின் பத்திரப் பதிவை ரத்து செய்த கோட்டாட்சியர் 90 பவுன் நகை மற்றும் காரை மீட்டு அழகர்சாமியிடம் ஒப்படைக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார். போலீஸார் வீட்டையும், கார், நகைகளையும் மீட்டு நேற்று அழகர்சாமியிடம் ஒப்படைத்தனர்.
கோட்டாட்சியர் முருகேசனிடம் நடவடிக்கையால் சொத்துகளை பெற்ற அழகர்சாமி தம்பதியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து கோட்டாட்சியர் முருகேசன் கூறுகையில், ‘‘சொத்துகளை மீட்டுக்கொடுத்து அவரது மகள்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன். முதியார்கள் இதுபோல் வாரிசுகளால் துன்புறத்தப்பட்டால் தைரியமாக புகார் தெரிவிக்கலாம், ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT