Last Updated : 23 Jul, 2019 03:28 PM

 

Published : 23 Jul 2019 03:28 PM
Last Updated : 23 Jul 2019 03:28 PM

சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் 2-வது ரயில்: ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டது

சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் 2-வது ரயில்

வேலூர்

சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் 2-வது ரயில் ஜோலார்பேட்டையில் இருந்து இன்று காலை புறப்பட்டது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க ஜோலார்பேட்டையில் இருந்து காவிரி கூட்டுக் குடிநீர் ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வர தமிழக முதல்வர் பழனிசாமி கடந்த மாதம் உத்தரவிட்டார். இதற்காக ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. 

ஜோலார்பேட்டை அடுத்த மேட்டு சக்கர குப்பத்தில் இருந்து பார்ச்சம்பேட்டை ரயில்வே யார்டு பகுதியில் அமைக்கப்பட்ட ராட்சதக் குழாய்களில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ரயில்வே வேகன்கள் மூலம் சென்னைக்கு தண்ணீர் எடுத்துச்செல்லத் திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் முடிவடைந்து ஜூலை 10-ம் தேதி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. 

இதையடுத்து, ஜூலை 12-ம் தேதி சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் முதல் ரயில் புறப்பட்டது. நாள் ஒன்றுக்கு 1 கோடி லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கொண்டு வரப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். ஆனால், ரயில்வே வேகன்களில் தண்ணீரை நிரப்பி, அதைச் சரிபார்த்து, ரயில் சென்னைக்கு சென்று சேரவும், அங்கு தண்ணீரை இறக்கிவிட்டு திரும்ப மொத்தம் 16 மணி நேரம் தேவைப்பட்டதால் திட்டமிட்டபடி 1 கோடி லிட்டர் தண்ணீர் சென்னைக்குக் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து, கூடுதல் ரயில்களை இயக்கினால் மட்டுமே 1 கோடி லிட்டர் தண்ணீர் சென்னைக்குக் கொண்டு செல்ல முடியும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, கூடுதலாக ரயில்வே வேகன்களை வழங்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்துக்கு மெட்ரோ அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். 

இதையடுத்து, 50 வேகன்கள் பொருத்தப்பட்ட 2-வது ரயில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு வந்தடைந்தது. முன்னதாக, இந்த ரயில் சேலம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு அங்கு 3 மணி நேரம் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றன. 

ஜோலார்பேட்டை 5-வது யார்டுக்கு வந்த 2-வது ரயிலில் தண்ணீரை நிரப்பும் பணி இன்று காலை 5.10 மணிக்குத் தொடங்கியது. காலை 8.10 மணிக்கு தண்ணீர் நிரப்பப்பட்டது. 50 வேகன்களில் 25 லட்சம் தண்ணீர் நிரப்பப்பட்டு அளவீடு சரி பார்க்கப்பட்டது. தண்ணீர் ஏற்றுவதற்கு முன்பாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பேரா மீட்டரைக் கொண்டு தண்ணீர் தரத்தை சோதனை செய்தனர். 

பிறகு, காலை 9.40 மணியளவில் 2-வது ரயில் சென்னையை நோக்கிப் புறப்பட்டது. திருவள்ளூரைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் ரயிலை இயக்கினார். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், ரயில்வே துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

"சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் 2-வது ரயில் இன்று காலை புறப்பட்டது. கடந்த 12-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை சென்னைக்கு 2 கோடியே 75 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும். தமிழக அரசு உத்தரவுப்படி நாள் ஒன்றுக்கு 1 கோடி லிட்டர் தண்ணீர் சென்னைக்கு அனுப்ப வேண்டுமென்றால் கூடுதலாக இன்னும் 2 ரயில்கள் தேவை. 

காரணம் தற்போது இயக்கப்பட்டு வரும் ரயிலில் ஒரு தடவை மட்டுமே தண்ணீர் கொண்டு செல்ல முடிகிறது. 2 ரயில்களில் 4 தடவை தண்ணீர் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலையால் கூடுதலாக 2 ரயில்கள் இயக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் சென்னைக்கு திட்டமிட்டபடி நாள் ஒன்றுக்கு 1 கோடி லிட்டர் தண்ணீர் அனுப்பி வைக்கப்படும். அதுவரை 50 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே சென்னைக்கு அனுப்பப்படும். 

சென்னைக்கு தண்ணீர் அனுப்பும் பணியில் 2 பொறியாளர்கள் தலைமையில், 45 தொழிலாளர்கள் தொடர்ந்து ஈடுபட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஜோலார்பேட்டை ரயில்வே யார்டு பகுதியை யொட்டி அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ரயில்வே வேகன்கள் எந்த நேரத்தில் வந்தாலும், உடனடியாக தண்ணீரை நிரப்பவும், மேட்டூரில் இருந்து காவிரி நீரை பம்ப் செய்ய தயார் நிலையில் ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

எனவே, ரயில்வே நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்கினால் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை எங்களால் பூர்த்தி செய்ய முடியும்"

இவ்வாறு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x