Published : 31 Jul 2015 08:19 AM
Last Updated : 31 Jul 2015 08:19 AM

கலாமுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் தயாரிப்பு: இரவு பகலாக இயங்கிய பிளக்ஸ் நிறுவனங்கள்

அப்துல் கலாம் மறைவையொட்டி தமிழகம் முழுக்க மிகவும் பிஸியாக இருந்தது பிளக்ஸ் பேனர் தயாரிப்பு நிறுவனங்கள்தான்.

அனைத்துக் கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள், பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள், மாணவர் அமைப்புகள் என அரசியல், ஜாதி, மத பேதமின்றி எல்லா தரப்பினரும் கடந்த 3 நாட்களாக அந்த மாமனிதருக்கு தங்கள் இதய அஞ்சலியை செலுத்தி வந்தனர். சாமான்ய மக்கள்கூட தங்கள் சக்திக்கேற்ப பணம் செலவழித்து, கலாமுக்கு அஞ்சலி செலுத்த பிளக்ஸ் பேனர் தயாரித்து வைத்திருந்தனர்.

சென்னையில் திரும்பிய பக்கமெல்லாம் கலாம் உருவம் பொறித்த பிளக்ஸ் பேனர்களே தென்பட்டன. திருவல்லிக்கேணியில் பிளக்ஸ் பேனர் தயாரிப்பு நிறுவனம் நடத்திவரும் முகமது ரில்வான் இதுகுறித்து கூறியதாவது:

கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் பேனர்களுக்காக ஏராளமான ஆர்டர்கள் வந்தன. வருவாய் கிடைக்கிறது என்பதைவிட நாட்டின் நலனுக்காக ஓய்வில்லாமல் உழைத்த ஒரு உன்னத மனிதருக்கு அஞ்சலி செலுத்த நினைக்கும் மக்களுக்கு நம்மால் ஆன உதவியை செய்வோமே என்ற எண்ணத்தில் கடந்த 2 நாட் களாக இரவு, பகல் பாராமல் அதிக கட்டணமின்றி பேனர்களை தயாரித்துக் கொடுத்தோம்.

தனது சக்திக்கு மீறி வேலை செய்ததால் இயந்திரங்கள் கோளாறு ஆகி சில மணி நேரம் உற்பத்தி தடைபட்டது. போதிய நேரமின்மையால் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களை கனத்த மனதுடன் எங்களது இயலாமையை தெரிவித்து திருப்பி அனுப்பினோம். இதேபோல பிளக்ஸ் பேனர் தயாரிப்பு தொழில் செய்துவரும் பல நூறு நிறுவனத்தினர் கடந்த 2 தினங்களாக தூக்கமில்லாமல் கலாமுக்காக அஞ்சலி பேனர் தயாரித்து கொடுத்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பிளக்ஸ் தயாரிப்பாளரான முத்து கூறும்போது, ‘‘இந்தப் பகுதியைச் சேர்ந்த சில பள்ளிச் சிறுவர்கள் என்னிடம் வந்து, ‘அப்துல் கலாம் ஐயாவுக்கு அஞ்சலி பேனர் வைக்கணும் எவ்வளவு செலவாகும்’னு கேட்டாங்க. அவர்களிடம் ஒரு தொகையைக் கூறினேன். சிறிது நேரத்தில் அவர்கள் சேமித்து வைத்திருந்த கொஞ்சம் பணம் மற்றும் சில்லறை காசுகளைக் கொண்டு வந்து கொடுத்தனர். அவர்களிடம் காசு வாங்க மனம் வரவில்லை. அவர்கள் கொடுத்த பணத்தை திருப்பித் தந்துவிட்டு ஒரு பேனர் செய்து கொடுத்தேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x