Published : 22 Jul 2019 06:03 PM
Last Updated : 22 Jul 2019 06:03 PM
மதுரையில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையைக் கண்டித்து ஆளும்கட்சி எம்.எல்.ஏ., தலைமையிலேயே பெண்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாநகராட்சியில் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் தொடங்கிய நாள் முதல் பெரும்பாலான வார்டுகளில் குடிநீர் வராததால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் இன்று (ஜூலை 22) ஆளும்கட்சி எம்எல்ஏ எஸ்.எஸ்.சரவணன் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆணையர் அலுவலகத்தில் பதற்றம் ஏற்பட்டது. மற்றொருபுறம் பொதுமக்கள் சாலை மறியலும் செய்ததால் கூடுதலாக பதற்றம் உண்டானது.
மதுரை மாநகராட்சி குடிநீருக்கு வைகை அணையை நம்பியே உள்ளது. தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாததால் வைகை அணை நீர் மட்டம் வீழ்ச்சியடைந்தது. அதனால், கடந்த வாரம் முதல் மாநகராட்சி 2 நாளுக்கு ஒருமுறை இருந்த குடிநீர் விநியோகத்தை 4 நாட்களுக்கு ஒருமுறையாக மாற்றியது. மேலும், வைகை அணையில் மாநகராட்சி பெறும் குடிநீர் அளவும் 60 கன அடியில் இருந்து 40 கன அடியாக குறைக்கப்பட்டது.
அதனால், குடிநீர் விநியோகம் அழுத்தம் குறைந்ததால் பெரும்பாலான வார்டுகளுக்கு குடிநீர் செல்லவில்லை. வசதி படைத்தவர்கள், விஐபிக்கள், வணிக வளாகங்களில் மின்மோட்டார்களை வைத்து குடிநீரை தாராளமாக உறிஞ்சியதால் அடித்தட்டு மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு குடிநீர் செல்லவில்லை.
தற்போது மதுரையில் நிலத்தடி நீர் மட்டமும் 1,000 அடிக்கு கீழ் சென்றதால் அன்றாட வீட்டு உபயோகத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பொதுமக்கள் மாநகராட்சியே சார்ந்துள்ளதால் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
குறிப்பாக கடந்த ஒரு வாரமாக 53, 54, 55, 63, 70, 71 வார்டுகளில் குடிநீர் வரவில்லை. மாநகராட்சி லாரிகளும் குடிநீர் விநியோகம் செய்ய வராததால் அதிருப்தியடைந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
அப்போது ஆணையாளர் வெளியே ஆய்வு செய்ய சென்றதால் பெண்கள், ஆணையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலும் இதுபோல் மக்கள் கூட்டமாக மாநகராட்சி அலுவலகம் வந்தால் அவர்களை நுழைவுவாயிலே போலீஸார் தடுத்து நிறுத்துவார்கள். ஆனால், ஆளும்கட்சி எம்எல்ஏவே பொதுமக்களை அழைத்து வந்ததால் போலீஸாரும், மாநகராட்சி அதிகாரிகளும் அவர்களை தடுக்க முடியவில்லை. தகவல் அறிந்த ஆணையாளர் விசாகன், உடனடியாக அலுவலகத்திற்கு திரும்பினார். அவரிடம், எம்எல்ஏ, சரவணன், அவருடன் வந்த பெண்கள், குடிநீர் பற்றாக்குறை குறித்து முறையிட்டனர்.
உடனே, ஆணையாளர் குடிநீர் பற்றாகுறையின் அடிப்படை சிரமங்களை எடுத்துக் கூறி, பாதிக்கப்பட்ட வார்டுகளில் தடையில்லாமல் குடிநீர் விநியோகம் செய்ய உறுதியளித்தார். அதன்பிறகு எம்எல்ஏ சரவணனும், பொதுமக்களும் கலைந்து சென்றனர்.
குடிநீர் பிரச்சனைக்காக அருள்தாசபரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழை தொடர்ந்து பெய்யாவிட்டால் மதுரையில் குடிநீருக்காக தினமும் போராட்டம், மறியல் தொடரும் அபாயம் இருப்பதால் மாநகராட்சி அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.
வில்லாபுரம் பாரதியார் தெரவை சேர்ந்த மாரீஸ்வரி கூறுகையில், ‘‘எங்கள் குடியிருப்பில் 10 நாளாக குடிநீர் வரவில்லை. குடிநீரை விலை கொடுத்து வாங்கவும் வசதியில்லை. இரவு குடிநீர் வருவதாக சொல்கிறார்கள். அதற்காக தூங்காமல் விடிய விடிய காத்திருந்ததுதான் மிச்சம். குடிநீர் வரவில்லை. சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு குடிநீர் எடுக்க பக்கத்து வார்டு பொது குடிநீர் குழாய்களுக்கு செல்ல வேண்டிய உள்ளது. அங்கும் நீண்ட வரிசை இருப்பதால் குடிநீர் இல்லாமல் வாழ்க்கையே முடங்கிப்போய் உள்ளது. அதிகாரிகளிடம் முறையிட்டும் கேட்காததால் ஆணையாளர் அலுவலகத்திற்கே வந்துவிட்டோம். லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதாக ’’ என்றார்.
அதிமுக எம்எல்ஏ-வின் அரசியல்:
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த முற்றுகைப் போராட்டம் குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆளும்கட்சி எம்எல்ஏவான சரவணன், குடிநீர் பற்றாக்குறை குறித்து போனில் தகவல் சொல்லியிருந்தாலே மாநகராட்சி ஆணையாளர் விசாகன் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று பிரச்சனையை சரி செய்திருப்பார்.
ஆனால், அவர் அப்படி செய்யாமல் ஆணையாளருக்கு ஒரு தகவலும் தெரிவிக்காமலே 200க்கும் மேற்பட்ட பெண்களை அழைத்து கொண்டு மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்துவிட்டு முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது மதுரைக்கு உள்ள குடிநீர் பற்றாக்குறைக்கு ஆளும்கட்சி ஒரு காரணமும் கூட. தேனி மாவட்ட குடிநீர் திட்டத்திற்கு வைகை அணையில் இருந்து அதிகளவு தண்ணீரை, விதிமுறைகளை மீறி பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்துவிடுகின்றனர். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மாவட்டம் என்பதால் பொதுப்பணித்தறை அதிகாரிகளை எங்களால் தட்டிக்கேட்க முடியவில்லை. அதனால், அனையில் தண்ணீர் குறைவதால் மதுரை மாநகராட்சி குடிநீர் விநியோகத்தை 4 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டிய உள்ளது. ஆளும்கட்சியினரின் அரசியலால் ஒரு புறம் மதுரையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளநிலையில் மற்றொரு புறம்.
குடிநீர் பற்றாக்குறை என்று கூறி ஆளும்கட்சி எம்எல்ஏ பொதுமக்களுடன் மாநகராட்சி ஆணையாளர் அலுவகத்தை முற்றுகையிடுகிறார். ஆளும்கட்சியின் இந்த இரட்டைநிலைப்பாட்டால் மாநகராட்சி அதிகாரிகள் தட்டிக் கேட்கவும் முடியாமல், உண்மையை வெளியே சொல்லவும் முடியாமல் தவிக்கிறோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT