Last Updated : 20 Jul, 2019 04:55 PM

2  

Published : 20 Jul 2019 04:55 PM
Last Updated : 20 Jul 2019 04:55 PM

சாலை விதிகளைப் பாடலாக பாடி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் காரைக்குடி போக்குவரத்து காவலர்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போக்குவரத்து காவலர் ஒருவர் சாலை விதிகளை பாடலாக பாடி வாகன ஓட்டிகளை கவர்ந்து வருகிறார்.

தேவகோட்டையைச் சேர்ந்த ராபின்சன் பிலிப் காரைக்குடியில் போக்குவரத்து தலைமை காவலராக பணிபுரிகிறார். இவருக்கு பெரியார் சிலை, பஸ்ட்பீட், செகன்ட் பீட் என மாறி, மாறி பணி வழங்கப்படுகிறது. அவர் பணியில் இருக்கும்போது யாரும் சிக்னல் விதிமுறைகளை மீறியதில்லை. அந்த அளவிற்கு வாகன ஓட்டிகளின் மனம்கவர்ந்த நபராக வலம் வருகிறார். 

சிக்னலுக்குக் காத்திருக்கும் வாகன ஓட்டிகளிடம் சாலை விதிகளை நகைச்சுவையாக, பாடலாக, கவிதையாக, வசனமாக பேசி அசத்துகிறார். இதனால் அவரது விழிப்புணர்வை அனைத்து வாகன ஓட்டிகளும் கூர்ந்து கவனிக்கின்றனர்.

 

முன்னாள் ராணுவீரராக இருந்த இவர், 1997-ல் காவல்துறையில் சேர்ந்துள்ளார். கொளுத்தும் வெயிலிலும் எந்தவித சோர்வும் இல்லாமல் போக்குவரத்தை சரிப்படுத்தி வருகிறார். ஹெல்மெட் அவசியம், சாலை விதிகளின் முக்கியத்துவம் போன்றவற்றை ஒலிப்பெருக்கி மூலம் உற்சாகமாய் எடுத்துச்சொல்கிறார்.

 இவரது பணியை கண்டு காவல்துறை உயரதிகளும் அவர் பணிபுரியும் இடத்திற்கே சென்று பாராட்டி வருகின்றனர். இப்பணிக்காக அவருக்கு இதுவரை 26 விருதுகள் கிடைத்துள்ளன. 

 இதுகுறித்து ராபின்சன் பிலிப் கூறியதாவது: வாகன ஓட்டிகளின் அலட்சியம், பொறுமை இல்லாததே பெரும்பாலான விபத்துகளுக்கு காரணம். போலீஸாரின் எச்சரிக்கையால் பலரும் ஹெல்மெட்டை வாங்கிவிடுகின்றனர்.

ஆனால் சோம்பேறிதனத்தால் அவற்றை பயன்படுத்துவதில்லை. சிலர் தலையில் மாட்டாமல் வண்டியிலேயே வைத்துக் கொண்டு பயணிக்கின்றனர்.   

நான் எப்போதும் கடினமான வார்த்தைகளை உபயோகிப்பதில்லை. அன்பாக சொல்லும்போது வாகன ஓட்டிகளும் எனது விழிப்புணர்வை உள்வாங்கிக் கொள்கின்றனர். விபத்துகள் இல்லா சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது லட்சியம், என்றார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x