Published : 06 Jul 2015 10:26 AM
Last Updated : 06 Jul 2015 10:26 AM
தமிழகத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களில் ஆதார் எண் குறிப்பிடும் வகையில் புதிய படிவங்களை அச்சடிக்கும் பணிகளை உள்ளாட்சி அமைப்புகள் துரிதப்படுத்தியுள்ளன.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. பெயர், பிறந்த தேதி, தாய், தந்தை பெயர், பிறந்த இடம் அல்லது இறந்த இடம், பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள் இச்சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், இனிவரும் காலங்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களில் ஆதார் எண்ணையும் சேர்த்து குறிப்பிட வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து பிறப்பை பதியும் போது பெற்றோரின் ஆதார் எண் ணையும், இறப்பை பதியும்போது இறந்தவர் ஆதார் எண்ணுடன் அவரது தாய், தந்தையர் அல்லது கணவன்/ மனைவியின் ஆதார் எண்ணையும் பதிவு செய்வதற்கான பணிகளை தமிழக சுகாதாரத் துறை துரிதப்படுத்தியுள்ளது.
இதன் ஒருபகுதியாக, புதிதாக அச்சடிக்கப்படும் படிவங்களில் ஆதார் எண் குறிப்பிடுவதற்கான வசதியை அளிக்கும்படி சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல் மாநகராட்சிகளின் ஆணையர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத் துறை துணை இயக்குநர்களுக்கு தமிழக அரசின் சுகாதாரத் துறை மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக ஆதார் எண் குறிப்பிடும் வகையில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களுக்கான படிவங்களை அச்சடிக்கும் பணியில் உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், பிறப்பு, இறப்பு பதிவு அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்களுக்கு ஆதார் எண்ணை குறிப்பிட்டு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் விஜயலட்சுமியிடம் கேட்டபோது, “ஆதார் எண் குறிப்பிடும் வசதியுடன் புதிய படிவங்கள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே அச்சடித்து வைக்கப்பட்டுள்ள பழைய படிவங்களை விநியோகித்து முடித்த பிறகு, இவை செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்” என்றார்.
இப்போதைக்கு கட்டாயமில்லை
சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, “பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற இப்போதைக்கு ஆதார் எண் கட்டாயமில்லை. எனினும், ஆதார் எண்ணைக் குறிப்பிட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு, அந்த எண்ணுடன் சான்றிதழ் வழங்கப்படும். புகைப்படத்துடன் கூடிய ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணிகள் 100 சதவீதம் முடிந்த பிறகு, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழில் ஆதார் எண் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட வாய்ப்புள்ளது. இது பல்வேறு முறைகேடுகளை தவிர்க்க உதவும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT