Published : 18 Jul 2019 02:51 PM
Last Updated : 18 Jul 2019 02:51 PM
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டிய சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளோம்.
அவ்வாறு இருக்கையில் எங்கேனும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் நிகழும்போது மட்டும் எதிர்ப்புக்குரல்கள் எழுப்பி அதோடு நிறுத்திவிடாமல் குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுப்பதற்காக தொடர்ந்து குரல்கள் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.
குழந்தைகள் மீதான சமீபத்திய தொடர் வன்முறை சம்பவங்கள் தொடர்பான செய்தி அடிபடும்போதெல்லாம், இந்த விவகாரத்தில் தமிழக அரசும், குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
இந்த விவகாரத்தில் அவர்கள் எடுத்துவரும் களப்பணிகள் என்ன? நடவடிக்கைகள் என்ன? என்பதை சாமானிய மக்களுக்குக் கொண்டு செல்வது முக்கியமானது.
தமிழகத்தைப் பொறுத்தவரை குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தமிழக அரசால் 2013 ஆம் ஆண்டு மத்திய அரசின் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்கள் சட்டம் 2005, பிரிவின் 17(1) -ன் சட்டப்படி ஏற்படுத்தப்பட்டது. தற்போது தமிழகத்தில் உள்ள மனித உரிமை ஆணையம், தலைவர் மற்றும் 6 உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.
இதில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் சுமார் 5 முதல் 6 மாவட்டங்களுக்கு பொறுப்பு வகிக்கின்றனர்.
இந்நிலையில் தமிழக குழந்தைகள் நல உரிமை ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நிர்மலாவைச் சந்தித்தோம். அவரிடம், குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுப்பதற்காக எத்தகைய நடவடிக்கைகளை ஆணையம் எடுத்து வருகிறது என்பது குறித்துப் பேசினோம்.
சமீபத்திய ஆண்டுகளில் குழந்தைகள் மீதான வன்முறைச் சம்பவங்களுக்கு, குழந்தைகள் மனித உரிமை ஆணையம் எத்தகைய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது?
கடந்த 2017 - 2018ம் ஆண்டில் மட்டும் சுமார் 266 வழக்குகள் ஆணையத்தால் கையாளப்பட்டுள்ளன. 2018 -2019 ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 1,748. இதில் 429 வழக்குகள் பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகள். 48 குழந்தைகளின் திருமணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதில் வெறும் தடுப்பு நடவடிக்கை மட்டுமில்லாது அக்குழந்தைகளை மீட்டு அவர்களது மறுவாழ்வுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். கடந்த 2018 ஏப்ரல் முதல் இந்த ஆண்டு 2019 மார்ச் வரை 429 போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இவ்வாணையத்தின் மூலம் இலவச கட்டாயக் கல்வி மறுக்கப்பட்ட குழந்தைகள் 405 பேர் பள்ளியில் மீண்டும் சேர்க்கப்பட்டனர். குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களைப் பள்ளியில் சேர்த்து தொடர்ந்து அவர்களின் வாழ்வாதாரத் தேவைகளைக் கவனித்து வருகிறோம்.
தமிழக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் நிர்மலா
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் குறித்த புரிதலோ, அப்படி ஒரு ஆணையம் செயல்படுகிறது என்றோ பொதுமக்கள் அறிந்து வைத்திருக்கிறார்களா?
நிச்சயம் பலரும் அறிந்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட குழந்தைகள், மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் எங்களைத் தொடர்புகொண்டு அவர்களது குறைகளைக் கூறுகிறார்கள். பள்ளிக்கு ஆசிரியர்கள் வரவில்லை என்றுகூட பள்ளிக் குழந்தைகள் எங்களிடம் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கிறார்கள்.
இவ்வாறுதான் எங்களுக்கும் பொதுமக்களுக்குமான உறவு இருக்கிறது. முன்பு இங்கு வருவதற்கு சற்று பயந்தவர்கள் கூட இங்கு வந்த பின்னர் அவர்களது எண்ணத்தை முற்றிலுமாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
அதுமட்டுமில்லாது நாங்கள் ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட குழந்தைகளை மீட்டு அவர்களின் மறுவாழ்வுக்கான அனைத்து நடவடிக்கைகளயும் ஊடக வெளிச்சத்துக்கு அப்பால் செய்து வருகிறோம். எங்களது ஒவ்வொரு வழக்கையும் அதில் நாங்கள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளையும் ஊடகங்களிடமும், பொதுவெளியிலும் கூற இயலாது எங்களுக்கு அக்குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியம்.
குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுப்பதற்கு எத்தகைய விழிப்புணர்வை மேற்கொள்கிறீர்கள்?
பாலியல் வன்முறைகள் தொடர்பான நிகழ்வுகளைத் தடுக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வைப் பெற்றோர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் என அனைவருக்கும் ஏற்படுத்தி வருகிறோம். அதுமட்டுமில்லாது பயிற்சி வகுப்புகள், பயிற்சிப் பட்டறைகளும் நடத்தப்படுகின்றன. அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளிலும் எங்களது விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை எங்கள் உறுப்பினர்கள் நடத்துகிறார்கள்.
பெரும்பாக்கம், கண்ணகி நகர் போன்ற புறநகர்ப் பகுதிகளில் உள்ள குடிசை மாற்று வாரியப் பகுதிகளில் வசிக்கும் சிறுவர், சிறுமியருக்கு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை நடத்தி வருகிறோம்.
இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களில் நீங்கள் குழந்தைகளிடம் அதிகமாக கவனித்த பிரச்சினைகள் என்னென்ன?
படிப்பில் சிரமப்படுவது மற்றும் அந்த வயதிலான காதல் ஈர்ப்பு இவைதான் அவர்களின் உளவியல் சார்ந்த பிரச்சினையாக இருக்கிறது. இதுதொடர்பாக மாணவர்களிடம் நட்பான முறையில் பேசி அவர்களிடம் ஏற்பட்டுள்ள மனச்சிக்கலைக் குறைத்து வருகிறோம்.
இப்போது ஆறாவது படிக்கும்போதே குழந்தைகள் செல்போன்களை உபயோகிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். இது தொடர்பாகவும், தற்கொலை எண்ணத்தைத் தூண்டும் ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாகவும் அவர்களிடம் நிறைய கலந்தாலோசிக்கிறோம்.
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் ஆள் பற்றாக்குறை இருக்கிறது என்று விமர்சனம் எழுந்துள்ளதே?
சில பற்றாக்குறை இருப்பினும், எங்கள் கடமைகளை நாங்கள் முழுமையாக உடனுக்குடன் செய்து வருகிறோம். இதில் தாமதம் ஏற்பட்டால் தான் நீங்கள் ஆணையத்தை விமர்சிக்க வேண்டும்.
அதுமட்டுமில்லாது நீதிமன்றம் இது தொடர்பாக உத்தரவிட்டிருக்கிறது. அரசுதான் இதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
பிரச்சினை என்று கூறினால், சம்பந்தப்பட்ட வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்ய காவல்துறை தரப்பு காலம் தாழ்த்துகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகளை விசாரணை என்று தொந்தரவு செய்யக் கூடாது. ஆதாரங்களைச் சேகரிப்பதற்கு குழந்தைகளை நட்புறவுடன் அணுகும் ஆய்வு சோதனைக் கூடங்கள் தேவைப்படுகின்றன.
அதுமட்டுமில்லாது பல பள்ளி விடுதிகள் மற்றும் மாற்றுத் திறனாளி முகாம்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் நிகழ்த்தப்படுகிறது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஜேஜே (Juvenile Justice) சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.
குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக எதிர்கால நடவடிக்கைகள், திட்டங்கள் என்ன?
ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வது. வீதி நாடகங்கள், பேரணிகள், ஊடகங்கள் மூலமாக தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம்.
போக்சோ, ஆர்டிஇ, குழந்தைகள் உரிமைகள் மீதான வன்முறைகள் என இவற்றின் நிலவரம் அறிய அவ்வப்போது மதிப்பீடுகளைப் பெற திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நிர்மலா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT