Published : 18 Jul 2019 12:41 PM
Last Updated : 18 Jul 2019 12:41 PM

மதுரை வைகை குடிநீர் திட்ட பிரதான குழாயில் உடைப்பு:  சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடிய குடிநீர்

சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடிய குடிநீர்

மதுரை

மதுரை மாநகராட்சியின் வைகை குடிநீர் திட்ட பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பால் சாலையில் குடிநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடி வீணானது. குடிநீர் பற்றாக்குறையால் 4 நாட்களுக்குஒரு முறை குடிநீர் விநியோகிக்கும் இந்த நேரத்தில் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணானதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

மதுரை மாநகராட்சியின் ஒட்டுமொத்த குடிநீர் தேவை வைகை அணையை நம்பியே உள்ளது. வைகை அணை, பெரியாறு அணையின் நீர் ஆதாரத்தை நம்பியே உள்ளது. பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகுகளில் தென்மேற்கு பருவமழை பெய்யாததால் நீர் வரத்து குறைவாக உள்ளது. மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக மட்டும் பெரியாறு அணையில் இருந்து 45 கன அடி தண்ணீர் வைகை அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்த தண்ணீர் போதுமானதாக இல்லை என்பதால் வைகை அணை நீர் மட்டம் 27.79 அடியாக வீழ்ச்சியடைந்துள்ளது.

வைகை அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மதுரை மாநகராட்சி தினமும் 81 எம்எல்டி குடிநீர் எடுத்து பொதுமக்களுக்கு 2 நாளைக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்து வந்தது. தற்போது தென்மேற்கு பருவமழை ஏமாற்றுவதால் மாநகராட்சி நேற்று 17-ம் தேதி முதல் திடீரென்று 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்கிறது. நிலத்தடிநீர் மட்டமும் மதுரையில் பரவலாகவே 1000 அடிக்கு கீழ் சென்றுவிட்டதால் மக்கள் ஒரு குடம் குடிநீர் ரூ.8 முதல் ரூ.10 என விலைக்கு வாங்குகின்றனர்.

வீட்டின் மற்ற அன்றாட செலவினங்களுக்கு தனியார் குடிநீர் லாரி, டிராக்டர்களில் முன்பதிவு செய்து குடிநீர் வாங்குகின்றனர். அதுவும் முந்தைய நாளே முன்பதிவு செய்தால் மட்டுமே விலைக்கும் குடிநீர் கிடைக்கிறது. இதேநிலை நீடித்தால் வைகை அணையில் இன்னும் 50 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் கையிருப்பு இருக்கும் என்பதால் வறட்சியை எதிர்கொள்ள மாநகராட்சி தயாராகி வருகிறது.

இந்நிலையில் மதுரை கோச்சடை முடக்கு சாலையில் வைகை குடிநீர் திட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஆறுபோல் சாலையில் குடிநீர் பெருக்கெடுத்து வீணாக ஓடுகிறது. குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்களுக்கு 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யும் மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் குழாய்களை சரியாக பராமரிக்காததால் இதுபோல் அடிக்கடி பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி கொண்டிருக்கிறது.

தற்போது உடைப்பு ஏற்பட்டகோச்சடைப்பகுதி நகரப்பகுதியில் என்பதால் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாநகராட்சி ஊழியர்கள், தற்போது உடைப்பு ஏற்பட்ட குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், உடைப்பு ஏற்பட்டது பிரதான குழாய் என்பதால் சில மணி நேரங்களிலே பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிவிட்டது.

இதுகுறித்து மாநகராட்சி குடிநீர் விநியோக அதிகாரிகள் கூறுகையில், "மதுரை மாநகராட்சியில் போடப்பட்ட குடிநீர் திட்ட பிரதான குழாய்கள், விநியோக குழாய்கள் அனைத்தும் பிரிட்டிஷார் மற்றும் எம்ஜிஆர் ஆட்சியில் போடப்பட்டவை. அந்த குழாய்கள் தற்போது வரை மாற்றப்படவில்லை. அதனால், அந்த குழாய்களில் தூர்ந்து போய் எப்போது வேண்டுமென்றாலும் எந்த இடத்திலும் உடையும் அபாய நிலையிலேயே குடிநீர் விநியோகம் நடக்கிறது. 

அதனால், தற்போது தயாராகும் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தில் மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் உள்ள குடிநீர் குழாய்கள் ரூ.530 கோடியில் மாற்றப்படுகிறது. அதன்பிறகு இதுபோன்ற உடைப்புகள் ஏற்படாது. தற்போது குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்படும் பகுதிகள் கண்காணிக்க மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உத்தரவிட்டுள்ளார்," என்றனர்.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x