Published : 18 Jul 2019 10:59 AM
Last Updated : 18 Jul 2019 10:59 AM

50 நாட்களுக்கு மட்டுமே வைகையில் குடிநீர் கையிருப்பு: வறட்சியை சமாளிக்க தயாராகும் அதிகாரிகள்

மதுரை

மதுரை நகரில் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்தும் வைகை அணையில் இன்னும் 50 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் கையிருப்பு உள்ளது. வறட்சியைச் சமாளிக்க மதுரை மாநகராட்சி தயாராகி வருகிறது.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டு களாகப் பருவமழை ஏமாற்றுவதால் நடப்பாண்டு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது.

கோவையைத் தவிர மற்ற மாநகராட்சிகள் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியாமல் பெரும் நெருக்கடியில் தவிக்கின்றன. வைகை அணையின் நீர்மட்டம் 27.79 அடி மட்டுமே உள்ளதால் மதுரை மாநகராட்சியும் வறட்சிக்கு இலக்காகி உள்ளது.

தென் மேற்குப் பருவமழை சரியாகப் பெய்யாததால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து இல்லை. இதனால், வைகை அணைக்கு வெறும் 45 கன அடி தண்ணீர் மட்டுமே வருகிறது. மதுரை நகரின் குடிநீர் பற்றாக்குறையைச் சமாளிக்க மாநகராட்சி நேற்று முதல் (ஜூலை 17) 4 நாட்களு க்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நடைமுறையில் குடிநீர் விநியோகம் செய்தாலும், வைகை அணையில் மதுரைக்கு இன்னும் 50 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் கையிருப்பு உள்ளதால் மாநகராட்சி நிர்வாகம் நெருக்கடியில் உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் விசாகன் கூறியதாவது:

மாநகராட்சிக்கு தற்போது 170 எம்எல்டி குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால், வைகை குடிநீர் திட்டத்தில் இருந்து 81 எம்எல்டி குடிநீரும், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து 11 எம்எல்டி குடிநீரும், மற்ற நீர் ஆதார அமைப்புகளில் இருந்து 5.41 எம்எல்டி குடிநீரும் கிடைக்கிறது. பெரியாறு அணைக்கு நீர் வரத்து இல்லாததால் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

பெரியாறு அணை நீர் பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை பெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. பெய்யாத பட்சத்தில் குடிநீருக்கு சிக்கல் ஏற்படும். மழை பெய்யாவிட்டாலும் வறட்சியை எப்படி சமாளிப்பது என்பதை ஆலோசித்துள்ளோம். தமிழக அரசு வறட்சி நிவாரண நிதியாக ரூ.11.45 கோடியை மதுரை மாநகராட்சிக்கு ஒதுக்கி உள்ளது.

மாநகராட்சியில் 35 சதவீதம் மக்கள், தங்கள் வீடுகளில் அமைத்துள்ள ஆழ்துளைக் கிணறுகள், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளைக் கொண்டு குடிநீர்த் தேவையைச் சமாளித்துவிடுவார்கள். வறட்சி வந்தால் மீதி பேருக்குதான் குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ளோம்.

ஏற்கெனவே, மாநகராட்சியில் குழாய் மூலம் தவிர்த்து 35 லாரி கள், 25 டிராக்டரை கொண்டு தினமும் பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்து வருகிறோம்.

தற்போது வறட்சி நிவாரண நிதியில் இருந்து கூடுதலாக 21 டிராக்டர்கள், 7 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய உள்ளோம். அதற்கான ஒப்பந்தப்புள்ளி நேற்று கோரப்பட்டது. தொடர்ந்து 3 மாதங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய ஒப்பந்தம் போட உள்ளோம்.

மாநகராட்சியில் மொத்தம் 1,810 ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. இதில் தண்ணீர் இன்றி 250 ஆழ்துளைக் கிணறுகள் நிரந் தரமாகச் செயல்படவில்லை. 50 பழு தடைந்துள்ளன.

இந்த ஆழ்துளைக் கிண றுகளைச் சீரமைக்கும் பணியைத் தொடங்கி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

கேரளாவில் ‘ரெட் அலர்ட்’

கேரளாவில் இதுவரை தென்மேற்குப் பருவமழை சரியாகப் பெய்யவில்லை. இன்றும் நாளையும் (ஜூலை 18, 19) கேரள மாநிலம் இடுக்கி, மலபார் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ‘ரெட் அலர்ட்’ கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி மழை பெய்தால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, வைகை அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. எதிர்பார்த்தபடி கேரளாவில் மழை பெய்தால் குடிநீர் பிரச்சினையில் இருந்து மதுரை மாநகராட்சி தப்பிக்கும் வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x