Published : 20 Jul 2015 05:09 PM
Last Updated : 20 Jul 2015 05:09 PM
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆட்சிக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது என, அதிகாரி களை அவர் கடுமையாக சாடினார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த இரு மாதங்களாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 10 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் இது 12 நாட்களை தாண்டிவிடுகிறது.
பெரும் தலைவலி
இதனால் குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். குடிநீர் பிரச்சினை காரணமாக மாநகராட்சி நிர்வாகம் மீது மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மேலும், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குடிநீர் பிரச்சினையை கையிலெடுத்து அரசியல் செய்ய தொடங்கிவிட்டன. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இந்த பிரச்சினை அதிமுகவுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.
இந்நிலையில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் நேற்று நேரடியாக களம் இறங்கினார். வல்லநாடு தாமிரவருணி ஆற்றில் இருந்து தண்ணீர் பம்பிங் செய்யப்படும் பகுதியை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், புதிதாக நடைபெற்று வரும் 4-வது பைப்லைன் திட்டப்பணிகளையும் ஆய்வு செய்தார். பின்னர் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்த அமைச்சர், குடிநீர் பிரச்சினை தொடர்பாக மேயர், துணை மேயர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதிகாரிகளை சாடல்
குடிநீர் பிரச்சினை இந்த அளவுக்கு பூதாகரமாக வெடித்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். அப்போது அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் குடிநீர் பம்பிங் செய்வதில் தடை ஏற்படுகிறது. இதன் காரணமாக குழாயில் அழுத்தம் ஏற்பட்டு அடிக்கடி உடைப்பு ஏற்பட்டுவிடுகிறது. இதுதான் குடிநீர் பிரச்சினைக்கு முக்கிய காரணம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்போது அதிகாரிகளை அமைச்சர் சண்முகநாதன் கடுமையாக சாடினார். ஆட்சிக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் செயல்படக் கூடாது. மின்தடை அடிக்கடி ஏற்படுவதை தடுக்க ரூ.1 கோடியில் நவீன ஜெனரேட்டர் அமைக்க வேண்டும். இதற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறேன். மின்தடை ஏற்பட்ட உடனே இந்த ஜெனரேட்டர் தானாக இயங்கும் வகையில் வசதி செய்ய வேண்டும், என்றார் அமைச்சர்.
3 நாட்களுக்கு ஒருமுறை
மேலும், ‘தூத்துக்குடி மாநகர மக்களுக்கு 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க வேண்டும். 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க முடியவில்லை என்றால், அந்த பகுதிகளுக்கு 4-வது நாளில் லாரி மூலம் குடிநீர் வழங்க வேண்டும்.
வல்லநாட்டில் இருந்து வரும் குடிநீர் குழாயில் உள்ள அனைத்து கசிவுகளையும் உடனே சீரமைக்க வேண்டும். திருட்டு குடிநீர் இணைப்புகள் இருந்தால் அவற்றை உடனே முறைப்படுத்த வேண்டும்’ என, அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
மேயர் ஏ.பி.ஆர். அந்தோணி கிரேஸ், துணை மேயர் பி. சேவியர், ஆணையர் (பொ) ராக்கப்பன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
பலன் தருமா?
தூத்துக்குடி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டால் கடந்த சில மாதங்களாக மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வரும் நிலையில் அமைச்சரின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் லேசான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அமைச்சரின் நடவடிக்கை பலன் தருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT