Published : 24 Jul 2015 08:41 AM
Last Updated : 24 Jul 2015 08:41 AM
மாலை 5.25 மணிக்கு பொதுக்கூட்ட மைதானத்துக்கு காரில் வந்திறங்கினார் ராகுல் காந்தி. சற்று முன்னர் தொடங்கிய மழை, அவர் வந்து இறங்கியபோது நின்றிருந்தது. அங்கு அவரை வரவேற்பதற்காக ஏராளமான கட்சி நிர்வாகிகள் காத்திருந்தனர். அவர்கள் அனைவரும் ராகுல் காந்திக்கு சால்வை அணிவித்தனர். அனைவரிடமும் சால்வையைப் பெற்றுக் கொண்ட பிறகே மேடை ஏறினார் ராகுல் காந்தி. ராகுல் காந்தி மேடை ஏறிய சிறிது நேரத்தில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது.
குடையை மறுத்த ராகுல் காந்தி
வரவேற்புரை முடிந்த நிலையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இதையடுத்து, பிற தலைவர்கள் பேசாமல் ராகுல் காந்தியை பேச வருமாறு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அழைத்தார். ராகுல் காந்தி, வணக்கம் என்று தமிழில் தொடங்கிவிட்டு ஆங்கிலத்தில் பேசினார். அவரது பேச்சை தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் மொழிபெயர்த்தார்.
மழை பெய்தபோது, மேடை யில் ராகுல் காந்திக்கு மைக் வைக்கப்பட்டிருந்த பகுதியில் சாரல் கடுமையாக விழுந்தது. இதில், ராகுல் காந்தி நனைந்தார். இதையடுத்து, திருநாவுக்கரசர் மொழிபெயர்த்து கொண்டிருந்த மைக்குக்கு ராகுல் சென்றார். அந்த மைக்கில் ராகுல் காந்தியும், திருநாவுக்கரசரும் மாறி மாறிப் பேசிக் கொண்டிருந்தனர்.
மழை தொடர்ந்து வேகமாக பெய்ததால், அங்கும் ராகுல் காந்தி மீது மழைத் துளிகள் தெறித்தன. இதையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் குடையை எடுத்துவந்து அவருக்குப் பிடிக்க முயன்றார். ஆனால், அதை வேண்டாம் என்பதுபோல கையால் தள்ளிவிட்டார் ராகுல்.
ராகுலும், திருநாவுக்கரசரும் பேசிக் கொண்டிருந்போது திடீரென அந்த மைக்கும் வேலை செய்யவில்லை. பின்னர், கோளாறு உடனடியாக சீரமைக்கப்பட்டு இருவரும் பேச்சைத் தொடர்ந்தனர்.
முத்தம் கொடுத்த தொண்டர்
பேச்சை முடித்தவுடன் ராகுல் காந்தி மேடையை விட்டு இறங்கி நேராக தொண்டர்கள் இருந்த பகுதி நோக்கிச் சென்றார். பாதுகாப்புப் படையினர் சூழ கட்சியினர் சிலருக்கு ராகுல் காந்தி கை கொடுத்தார். அவர்களில் ஒரு தொண்டர் ராகுல் காந்தி கையில் முத்தம் கொடுத்தார்.
கலையாத கூட்டம்
மழை வேகமாக பெய்தபோதும் தொண்டர்கள் கலையாமல் ராகுல் காந்தி பேச்சை கேட்டுக் கொண்டிருந்தனர். திடீரென மழை மேலும் வேகமெடுத்தபோது, ராகுல் காந்தியை நெருங்கிய இளங்கோவன், அவரிடம் ஏதோ கூறிவிட்டு, கூட்டத்தைப் பார்த்து “மழை பலமாக பெய்தாலும் கலையாமல் இருப்பீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, இருப்போம் என்பதுபோல கூட்டத்தினர் உரக்க கத்தினர். “அப்படியானால், தொடர்ந்து பேசுவார்கள்” என்று கூறிவிட்டு நகர்ந்தார் இளங்கோவன்.
அதன்படி, பொதுக்கூட்டம் முடியும் வரை தொண்டர்கள் கலையாமல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காரை தவிர்த்தார்
மிக முக்கிய நபர்கள் விமானத் தில் வந்திறங்கும்போது, அவர்கள் பயணம் செய்யும் வாகனம் விமானம் அருகில் வரை கொண்டு செல்லப்படுவது வழக்கம். ஆனால், திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கிய ராகுல் காந்தி, தனக்காக கொண்டு வரப்பட்ட காரில் ஏறாமல், அங்கிருந்து மிக முக்கிய நபர்கள் தங்குமிடம் வரை நடந்தே வந்தார். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
பத்திரிகையாளருக்கு இடமில்லை
பத்திரிகையாளர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த இருக்கை களை கட்சியினர் ஆக்கிரமித்து அமர்ந்து கொண்டனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸார், அவர்களை எப்படி அனுமதித்தனர் என்று தெரியவில்லை. பத்திரிகையாளர்கள் கேட்டும் கட்சியினர் இருக்கைகளை விட்டு எழ வில்லை.
இதுகுறித்து மேடையில் பேசிக் கொண்டிருந்தவரிடம் பத்திரிகையாளர்கள் உரக்க சத்தமிட்டு கூறினர். அவர், பத்திரிகையாளர் இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்கள் அங்கிருந்து எழுந்துவிடுமாறு பலமுறை மைக்கில் கேட்டும்,கட்சியினர் அதை கண்டுகொள்ள வில்லை.
வேறு வழியின்றி பத்திரிகையாளர்கள் வேறு இடங்களில் இருந்து இருக்கைகளை எடுத்து வந்து பாதுகாப்பு பகுதிக்கு அருகில் போட்டு, அமர வேண்டியதாயிற்று.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT