Published : 15 Jul 2019 05:32 PM
Last Updated : 15 Jul 2019 05:32 PM
வைகைஅணையில் 20அடி வரை மண்மேவிக் கிடக்கிறது. இதனால் முழுமையாக நீரைத் தேக்க முடியாமல் ஒரு டிஎம்சி.வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வைகை அணை கட்டியதிலிருந்து இதுவரை தூர்வாராததால் 20 அடி வரை வண்டல் உள்ளிட்ட பல்வேறு வகையான மண் படிந்துள்ளது. இதனால் முழு கொள்ளளவான 71 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்க முடியாத நிலை உள்ளது.
கடந்த பல ஆண்டுகளாகவே விவசாயிகள் தரப்பில் அணையைத் தூர்வார கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல தொழில்நுட்ப வல்லுநர்கள் அணையைப் பார்வையிட்டும், அதிகாரிகளுடன் விவாதித்தும் இதுவரை இப்பணி நடைபெறவில்லை.
எனவே அணையை தூர்வார சட்டமன்றக்கூட்டத் தொடரிலே உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று (திங்கள்கிழமை) ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டச் செயலாளர் கண்ணன் தலைமை வகிக்க, மாநில குழு உறுப்பினர் ராஜப்பன் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் ஜெயராஜ், நிர்வாகிகள் முருகன், பாண்டியன், தயாளன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டச் செயலாளர் கண்ணன் கூறியதாவது: தற்போது மத்திய,மாநில அரசுகளின் பட்ஜெட் மானிய கோரிக்கையின் விவாதங்கள் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் நடைபெற்று வருகிறது. எனவே 5 மாவட்ட விவசாயிகளின் நீர்ஆதாரமான வைகைஅணையை தூர்வாரி முழுக்கொள்ளளவிற்கும் நீர் தேக்க வேண்டும். மண் மேவிக் கிடப்பதால் 1 டிஎம்சி.நீர் இழப்பு ஏற்படுகிறது.
இதனால் விவசாயம் மட்டுமல்லாது, குடிநீர்க்கும் அதிகளவில் பிரச்னை ஏற்படுகிறது.
வண்டல்மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். பல்வேறு நீராதாரங்கள் வறண்டு விட்ட நிலையில் இன்றைக்கு வைகைஅணைதான் விவசாயிகளின் முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. ஆனால் அதுவும் அணை என்ற நிலையில் இருந்து குளம் போல மாறி விட்டது. எனவே விரைவில் தூர்வாருவதற்கான நடவடிக்கைகளை முடுக்கவிட வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT