Published : 15 Jul 2019 04:04 PM
Last Updated : 15 Jul 2019 04:04 PM
ஆண்டிபட்டியில் உள்ள மழைநீர் சேகரிப்பு மாதிரி கிணற்றை மாவட்டத்தில் உள்ள செயல் அலுவலர்கள் குழு பார்வையிட்டது. இதுபோன்று மற்ற பேரூராட்சிகளிலும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 35ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். குடிநீர் திட்டங்கள் கோடையில் செயலிழந்ததால் ஆண்டுமுழுவதும் நீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை இங்கு இருந்தது.
இந்நிலையைப் போக்க ஆண்டிபட்டியில் உள்ள கிணறுகளை மழைநீர் சேகரிப்பு கலனாக மாற்றி அமைக்க பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. எனவே இங்குள்ள 23 கிணறுகளில் முதற்கட்டமாக 8 கிணறுகளில் இதுபோன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன. இதற்காக வீடுகளின் மொட்டைகளில் இருந்து இந்த கிணற்றிற்கு நேரடி குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டது. குறிப்பாக சக்கம்பட்டி திருவள்ளுவர் காலனியில் உள்ள பழங்கால கிணறு முன்மாதிரி திட்டமாக உருவாக்கப்பட்டது.
இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து கிணற்றுக்கு இணைப்பு வழங்கப்பட்டது. இதனால் மொட்டைமாடிகளில் விழும் மழைநீர் நேரடியாக கிணற்றிற்கு வந்தது. மேலும் வீட்டின் குடிநீர் தொட்டி நிரம்பி வெளியேறும் தண்ணீரும் இதில் சேகரமானது.
கிணற்றில் இலை, குப்பைகள் விழாதவாறு வலை அமைக்கப்பட்டது. இது குறித்த செய்தி கடந்த மாதம் இந்து தமிழ் திசையில் வெளியானது.
இதனைத் தொடர்ந்து மற்ற உள்ளாட்சி அமைப்புகளிலும் இதுபோன்ற மாற்றத்தை செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குநர் விஜயலட்சுமி தலைமையில் 20-க்கும்மேற்பட்ட செயல் அலுவலர்கள் இன்று ஆண்டிபட்டி வந்து இந்த மழைநீர் சேகரிப்பு மாதிரி கிணற்றை பார்வையிட்டனர்.
மழைநீர் வரும் வகையில் குடியிருப்புகளில் பொருத்தப்பட்ட குழாய், வரும் நீரை நான்குகட்டமாக வடிகட்டும் அமைப்பு, மழைநீர் சேகரிப்பினால் நீர்மட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் குறித்து ஆண்டிபட்டி செயல் அலுவலர் பாலசுப்பிரமணி செயல்விளக்கம் அளித்தார்.
இப்பகுதிகளில் இருந்து வரும் நீர் கிணற்றின் முகப்பில் உள்ள தொட்டியில் 4 அடுக்குகளாக தூய்மைப்படுத்தப்படுகிறது. அதன் பின்பே கிணற்றுக்குள் விழுகின்றன. இந்த அமைப்பின் மூலம் 2ஆயிரத்து 38 சதுரஅடியில் விழும் மழைநீர் விரயமாகாமல் கிணற்றுக்குள் தானாகவே வந்துவிடும் என்றும் விளக்கப்பட்டது.
இதனை செயல் அலுவலர் குழுவினர் குறிப்பு எடுத்துக் கொண்டனர். இதற்காக ஒவ்வொரு கிணற்றிற்கும் மேற்கொள்ள வேண்டிய செலவினம், செயல்படுத்தும் விதம் குறித்து கேட்டறிந்தனர்.
இதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள பிற பேரூராட்சிகளிலும் இதுபோன்ற அமைப்பை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அதற்கான சாத்தியக்கூறுகள், சேகரமாகும் மழைநீரின் அளவு, திட்டமதிப்பீடு உள்ளிட்ட விபரங்களை அறிக்கையாக சமர்பிக்கவும் பேரூராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மழைக்கு முன்பாக குளம், கண்மாய்களை தூர்வார குடிமராமத்துப் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக மொட்டை மாடிகளில் பெய்யும் மழைநீரையும் அந்தந்த பகுதிகளிலே சேகரிப்பதற்கான ஏற்பாடுகளும் துவங்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT