Published : 15 Jul 2019 08:48 AM
Last Updated : 15 Jul 2019 08:48 AM
உச்சத்தில் உள்ளவர் எப்போதும் கீழே வந்து தான் ஆக வேண்டும். காங்கிரஸ் கட்சியை யாரும் அசைத்துப் பார்க்க முடியாது. தற்போது தோல்வி அடைந்து இருக்கிறோம் மீண்டும் வெற்றிபெற்று வருவோம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
கர்நாடகம் மற்றும் கோவாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டி புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி தலைமையில் மாநில காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம், புதுச்சேரி பொறுப்பாளர் சஞ்சய்தத் மற்றும் அமைச்சர்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தி காமராஜர் சிலையில் இருந்து தலைமை தபால் நிலையம் வரை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.
இறுதியில் தலைமை தபால் நிலையம் அருகே முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
''கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்த உடன் பாஜக ஆட்சி அமைக்க காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் குதிரை பேரம் பேசினர். ஆனால், அப்போது நடக்கவில்லை. தற்போது மத்தியில் மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பாரதிய ஜனதா கட்சி தனது விஸ்வரூபத்தைக் காட்ட ஆரம்பித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி மும்பையில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் அவர்களை தங்க வைத்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் பாஜகவிற்கும் சம்பந்தம் இல்லை என பொய்யான பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். சந்தையில் மாடுகளை விலை பேசுவது போல சட்டப்பேரவை உறுப்பினர்களை விலை பேசி ஜனநாயக படுகொலையை செய்து வருவதை எந்த காலத்திலும் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாது .
கோவாவில் உள்ள காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி தருவதாக ஆசை வார்த்தை காட்டி , தன்னுடைய சித்து வேலையைக் காட்டி இருக்கிறது. அதிகார போதையில் உள்ள நரேந்திர மோடி அரசு நாட்டு மக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை துன்புறுத்துவது மட்டுமல்லாமல், சட்டப்பேரவை உறுப்பினர்களை குதிரை பேரம் பேசி வருகின்றது. உச்சத்தில் உள்ளவர் எப்போதும் கீழே வந்து தான் ஆக வேண்டும். காங்கிரஸ் கட்சியை யாரும் அசைத்துப் பார்க்க முடியாது. தற்போது தோல்வி அடைந்து இருக்கிறோம். மீண்டும் வெற்றிபெற்று வருவோம்''என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வுக்குப் பிறகு முதல்வர் நாராயணசாமி, சஞ்சய்தத் மற்றும் நிர்வாகிகள் அப்பகுதியிலுள்ள சாலையோர டீக்கடையில் டீ சாப்பிட்டு புறப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT