Last Updated : 04 Jul, 2015 08:33 AM

 

Published : 04 Jul 2015 08:33 AM
Last Updated : 04 Jul 2015 08:33 AM

இறப்புக்கு பிறகும் தொடரும் போராட்டம்: சாதியம், வகுப்புவாத கிருமிகளால் ஒட்டுமொத்த சமூகமும் பாதிப்பு - சமத்துவத்தை போதிக்க உயர் நீதிமன்றம் வலியுறுத்தல்

மனித உடல் ‘காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ என்பதை மக்கள் மறந்து விட்டனர். இதனால் சமத்துவம், சகோதரத்துவம் குறித்து மதத் தலைவர்கள் வலியுறுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், ஏ.வெள்ளோடு பகுதியைச் சேர்ந்தவர் பி.ஜோசப்ராஜ். இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், இறந்த வர்களின் உடல்களை ஏ.வெள் ளோடு பொம்மச்சிக் கண்மாயில் அடக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும், அந்த கண்மாயில் ஏற்கெனவே புதைக்கப்பட்ட ஜஸ்டின் திரவியம், தோமையார் சடலங்களை அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஜி.சொக்க லிங்கம் ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று முன்தினம் விசாரித்து பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், ஏ.வெள்ளோடு பகுதியில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இரு பிரிவினர் இடையே இறந்தவர்களின் சடலங் களை அடக்கம் செய்வதில் பிரச்சினை இருப்பதாகவும், கடந்த 2012-ல் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு பிரிவைச் சேர்ந்த சடலங்களை அடக்கம் செய்ய தனி இடம் ஒதுக்கப்பட்டது. பின்னர், அந்த இடத்தில் ஊராட்சி சார்பில் கிணறு தோண்டப்பட்டது. இதனால், பொம்மச்சி கண்மாயில் ஒரு பிரிவைச் சேர்ந்த இருவரது சடலங்கள் அடக்கம் செய்யப் பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமங்களில் ஒவ்வொரு சாதியினருக்கும் தனித்தனி மயா னங்கள் உள்ளன. இது வருத்தம் அளிக்கிறது. இறந்தவரின் சடலத்தை நல்ல முறையில் அடக்கம் செய்வதற்கு, சண்டையிட வேண்டியுள்ளது. வாழும்போது உரிமை, சொத்து, மரியாதைக்காகப் போராடுகின்றனர். இறப்புக்கு பிறகும் இப்போராட்டம் தொடர்வது வலியை ஏற்படுத்துகிறது.

இறந்த வர்களின் சடலத்தை அடக்கம் செய்யும் இடம், நினைவு அஞ்சலி செலுத்தும் இடமாகவும் உள்ளது. பெருநகரங்களில் இடவசதி இல்லாததால் மின்மயா னம் அமைக்கப்படுகிறது. கிராமங் களில் ஒவ்வொரு சாதியினருக்கும் தனித்தனி மயானம் இருப்பதாகத் தெரிகிறது.

சாதியம், வகுப்புவாதம் போன்ற கிருமிகளால் ஒட்டுமொத்த சமூகமும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்த கிருமிகள் நிரந்தர இடத்தை பிடித்துள்ளன. இறந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்வதில் எவ்வாறு சண்டையிடுகின்றனர் என்பதற்கு இந்த வழக்கு சிறந்த உதாரணம். மனித உடல் ‘காயமே இது பொய்யடா, வெறும் காற்ற டைத்த பையடா’ என்பதை மறந்து விட்டனர். இதனால் மதத் தலை வர்கள் மக்களிடம் சமத்துவம், சகோதரத்துவத்தை வலியுறுத்த வேண்டும்.

திண்டுக்கல் கோட்டாட்சியர், ஒரு பிரிவில் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய, சிறுநாயக்கன்பட்டியில் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரி வித்துள்ளார்.

அந்த இடத்தில் சடலத்தை அடக்கம் செய்ய யாரும் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது. இப்பிரச்சினைக்கு ஆட்சியர் நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பில் குறிப் பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x