Published : 14 Jul 2015 10:32 AM
Last Updated : 14 Jul 2015 10:32 AM

கடைகளில் சாதாரணமாக கிடைக்கும் குட்கா, பான் மசாலா - உங்கள் குரல்: வாசகர்களின் புகார்கள்

‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட புகார்கள்:

கடைகளில் சாதாரணமாக கிடைக்கும் குட்கா, பான் மசாலா

தடை விதிக்கப்பட்ட நிலையிலும் தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் பெட்டிக்கடைகளில் குட்கா, பான் மசாலா போன்றவை சாதாரணமாக விற்பனை செய்யப்படுகின்றன.

இதுகுறித்து ‘தி இந்து’ உங்கள் குரலில் பெயர் குறிப்பிட விரும்பாத வாசகர் ஒருவர் கூறியதாவது:

தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்களின் உற்பத்தி, இருப்பு வைப்பு, விற்பனை ஆகியவற்றுக்கு தமிழக அரசு கடந்த 23.05.2013 தடை விதித்தது. தடை அறிவிப்பு வெளியான சில நாட்கள் மட்டும் தீவிரமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு புகையிலை மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விற்பனை மற்றும் தயாரித்தவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் இப்போது அனைத்து இடங்களிலும் சாதாரணமாக இவை கிடைக்கின்றன. போலீஸ் நிலையங்களுக்கு அருகே இருக்கும் கடைகளில்கூட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த 2 ஆண்டுகளில் ரூ.9.13 கோடி மதிப்புள்ள போதைப் பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஆனால், அதைவிட 100 மடங்குக்கும் அதிகமான போதைப் பாக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கும் என்று வேறு சில புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பள்ளிகளின் அருகே 100 மீட்டர் தூரத்தில் உள்ள கடைகளில் சிகரெட் உட்பட எந்த போதை பொருட்களும் விற்கக்கூடாது என்ற விதி உள்ளது. ஆனால் இதை யாருமே பின்பற்றுவதில்லை.

அரசு, காவல் துறை, உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நினைத்தால் போதை பொருட்கள் விற்பனையை முற்றிலுமாக தடுக்க முடியும். ஆனால் இதற்கான எண்ணம் மட்டும் யாருக்குமே வருவதில்லை. இவ்வாறு அந்த வாசகர் கூறினார்.

***

ராமாபுரம், மதுரவாயல், நெமிலிச்சேரியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் அவதி

ராமாபுரம், மதுரவாயல் மற்றும் நெமிலிச்சேரி ஆகிய இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக வாசகர்கள் உங்கள் குரலில் புகார் செய்துள்ளனர்.

இதுகுறித்து, ராமாபுரத்தைச் சேர்ந்த வாசகர் எஸ்.சுப்பிரமணியன், மதுரவாயலைச் சேர்ந்த ஆர்.ரவிக்குமார், நெமிலிச்சேரியைச் சேர்ந்த கே.ராகவேந்திர பட் ஆகியோர் ‘தி இந்து’ உங்கள் குரல் தொலைபேசி சேவையை தொடர்பு கொண்டு கூறியதாவது:

ராமாபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கமும் அதிகமாக இருப்பதால் இந்த மின்வெட்டால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதேபோல், மதுரவாயல் பகுதியிலும் கடந்த சில நாட்களாக மின்வெட்டு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இதனால், இரவு நேரத்தில் பொதுமக்கள் கொசுக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டாபிராம் அடுத்த நெமிலிச்சேரியில் உள்ள தேவி நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மின் அழுத்தப் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இதனால், இரவு நேரங்களில் ஏ.சி.யை பயன்படுத்த முடிவதில்லை. வீட்டில் உள்ள மின்சாதனங்களும் பழுதடைகின்றன. எனவே இப்பிரச்சினைக்குத் தீர்வு காண போதிய டிரான்ஸ்பார்மர்களை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மேற்சொன்ன 3 இடங்களிலும் உள்ள டிரான்ஸ்பார்மர்களில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருந்தால் மின்தடை ஏற்பட்டிருக்கக் கூடும். மற்றபடி தற்போது எங்கும் மின்வெட்டு செய்யப்படுவது இல்லை. எனினும், இப்பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

***

காஞ்சிபுரம் முக்கிய சாலைகளில் விபத்து ஏற்படும் அபாயம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், வைகாசி பிரம்மோற்சவத்தையோட்டி கடந்த 5-ம் தேதி திருத்தேர் வீதியுலா நடைபெறுவதற்காக, காந்தி சாலை, காமராஜர் சாலை, ராஜவீதிகளில் சாலை யின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை, நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.

பிரம்மோற்சவம் முடிந்து 40 நாட்களாகியும், அகற்றப்பட்ட தடுப்புகள் மீண்டும் அமைக்கப்படாமல் உள்ளன. இதனால், மேற்கூறிய சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் தங்கள் வசதிக்கேற்ப சாலையை கடக்கின்றனர். இதனால் காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே விரைவாக சாலைத் தடுப்புகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ‘தி இந்து’வின் உங்கள் குரல் சேவையில் நகர வாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் கார்த்திகேயன் கூறும்போது, “வரதராஜபெருமாள் உற்சவத்தின் போது, சாலைத் தடுப்புகளை அகற்றுவது வாடிக்கையான ஒன்று. இம்முறை, ஒப்பந்த அடிப்படையில் சாலை தடுப்பு களை மீண்டும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. ஒரு சில நாட்களில் பணிகள் தொடங்கப்படும்” என்றார்.

அன்புள்ள வாசகர்களே..

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

044-42890002என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x