Last Updated : 30 Jul, 2015 06:02 PM

 

Published : 30 Jul 2015 06:02 PM
Last Updated : 30 Jul 2015 06:02 PM

தமிழகத்திலேயே இரு முறை விளைச்சலால் உடுமலையில் ‘மாங்கூழ்’ ஆலை அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

தமிழகத்திலேயே ஆண்டுக்கு இருமுறை மா விளைச்சல் கிடைப்பதால், உடுமலைப் பகுதியில் ‘மாங்கூழ்’ தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம் தாலுகா, தளி, ஜல்லிபட்டி, மானுப்பட்டி, திருமூர்த்திமலை, பொன்னாலம்மன்சோலை, ஆத்தூர், ருத்திராபாளையம் உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் மாம்பழ சாகுபடி நடைபெற்று வருகிறது.

மா விவசாயி ஆர்.கோபால் கூறும்போது, ‘மானாவாரி பயிரான மா விவசாயத்துக்கு குறைந்த அளவு நீரும், அதற்கேற்ப தட்பவெப்ப நிலையும் அவசியம். அந்த இரண்டும் உடுமலை விவசாயிகளுக்கு இயற்கை வழங்கியுள்ளது. அதனால் பாரம்பரியமாக ஆண்டுக்கு இரு போக விளைச்சல் கிடைக்கிறது. நவீன வேளாண்மையின் வரவால் சுமார் 1,500 வகையான ரக மா நாற்றுக்கள் உள்ளன. பாரம்பரிய ரகங்கள் இல்லை.

பெரும்பாலானவை ஒட்டுரகம் தான். அதில் 40 முதல் 50 வகையான ரகங்களையே இப்பகுதி விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பால் நிலையான விலை கிடைப்பதில்லை.

காட்டுப் பன்றிகள், காட்டு யானைகளின் தொல்லை அதிகமாக உள்ளது. அதனால் ஆண்டு தோறும் பல விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். மாவுப் பூச்சி தாக்குதல் காரணமாக பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும், மாங்கூழ் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க வேண்டும், ஆழ்குழாய் அமைத்து சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம்’ என்றார்.

ஆண்டுக்கு 7,500 டன்

தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்கள் இளங்கோவன் (உடுமலை) ராஜேந்திரன் (மடத்துக்குளம்) ஆகியோர் கூறியதாவது: உடுமலை தாலூகாவில் சுமார் ஆயிரம் ஏக்கரும், மடத்துக்குளம் தாலுகாவில் சுமார் 400 ஏக்கரும் மா சாகுபடி நடைபெறுகிறது. காளப்பாடி, அல்போன்சா, பங்கனப்பள்ளி, நீலம், கல்லா, பெங்களூரா என பல ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. ஒரு ஏக்கருக்கு 5 முதல் 6 டன் என்ற அளவில் ஆண்டுக்கு 7,500 டன் வரை விளைச்சல் கிடைக்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் சாதகமான தட்ப வெப்ப நிலையால் தமிழகத்தில் கன்னியாகுமரிக்கு அடுத்து ஆண்டுக்கு இரு முறை விளைச்சல் கிடைப்பதில் உடுமலை சிறந்து விளங்கி வருகிறது. சராசரியான மழை, அதே அளவு வெப்பம் இதற்கு ஏற்ற சூழல் ஆகும். பொதுவாக ஏப்ரல் முதல் ஜூன் வரை மாம்பழ சீசன் இருக்கிறது. உடுமலை பகுதி விவசாயிகள் பிற மாதங்களிலும் அறுவடை செய்வதால், அதற்கு நல்ல விலை கிடைக்கிறது.

பெரும்பாலான சாகுபடி நிலங்கள் வன எல்லைகளை ஒட்டியே உள்ளன. அதனால் வன விலங்குகளால் சில விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். பாதிப்புக் குள்ளாகும் விவசாயிகளுக்கு இழப்பின் அடிப்படையில் வனத்துறை மூலம் நிவாரணம் அளிக்கப்படுகிறது, என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x