Last Updated : 12 Jul, 2015 06:47 PM

 

Published : 12 Jul 2015 06:47 PM
Last Updated : 12 Jul 2015 06:47 PM

நிலச் சட்டம்: மோடி கூட்டத்தை புறக்கணிக்க காங்கிரஸ் முதல்வர்கள் திட்டம்

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றுவதில் உள்ள முட்டுக்கட்டைகளை நீக்கும் முயற்சியாக, பிரதமர் மோடி நடத்தவுள்ள ஆலோசனைக் கூட்டத்தை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளனர்.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 2013-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செய்த சில மாற்றங்கள் காரணமாக இம்மசோதா சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இந்த நிலையில், சர்சைக்குரிய நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரம் பற்றி பேசி கருத்தொற்றுமை காண பிரதமர் நரேந்திர மோடி வரும் 15-ம் தேதி ஆலோசனை கூட்டத்தை நடத்தவுள்ளார்.

அடுத்தவாரம் தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த மசோதாவை அறிமுகம் செய்ய அரசு தீவிரம் காட்டிவரும் நிலையில், அதற்கு முன்பாகவே கருத்தொற்றுமைக்காக பாஜக அரசு போராடி வருகிறது.

அதன் முக்கியப் பகுதியாக கருதப்படும் மோடியின் முயற்சியைப் பிசுபிசுக்கச் செய்யும் நோக்கத்தில் காங்கிரஸ் முதல்வர்கள் ஜூலை 15 கூட்டத்தில் பங்கேற்பது இல்லை என திட்டமிட்டுள்ளனர்.

நில மசோதா விவசாயிகளுக்கு எதிரானது, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமான என்று விமர்சித்து வருகிறது காங்கிரஸ் கட்சி. இந்நிலையில், மோடி அழைத்துள்ள ஜூலை 15ம் தேதி கூட்டத்தை காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் புறக்கணிக்கப்போகிறார்களா என்று கேட்டதற்கு, அப்படித்தான் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

நில மசோதா விவகாரம் மீது விவாதிக்கவே முதல்வர்கள் கூட்டத்துக்கு மோடி ஏற்பாடுசெய்துள்ளார். கேரளம், கர்நாடகம், இமாச்சலப்பிரதேசம், உத்தராகணட், அசாம், மணிப்பூர், மேகாலயா, அருணாசலப் பிரதேசம், மிசோரமில் காங்கிரஸ் ஆட்சி புரிகிறது.

மோடியின் ஆலோசனைக் கூட்டத்துக்கு வரும் நிலையில் இல்லை என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா ஏற்கெனவே தெரிவித்துவிட்டார். எனவே காங்கிரஸ் முதல்வர்கள் இந்த கூட்டத்துக்கு வராமல்போனால் 30 முதல்வர்களில் 10 முதல்வர்கள் வராமல் போகும் நிலை ஏற்படு்ம்.

நில மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பானர்ஜி மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த மசோதா மீது ஆய்வு நடத்தும் நாடாளுமன்றக்குழுவுக்கு நிலம் கையகப்படுத்துதல் மசோதாவில் உள்ள பிரிவுகளை தமது மாநிலம் எதிர்ப்பதாக தெரிவித்து காங்கிரஸ் முதல்வர்களும் கடிதம் எழுதியுள்ளனர். 2013-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரக்கூடாது என்று அவர்கள்தெரிவித்துள்ளனர்.

இத்தகைய திருத்தங்கள் விவசாயிகளுக்கு எதிரானதாகவும் பழங்குடிகள், கிராமசபைகளின் உரிமைகளை பறிப்பதாகவும் இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

நிலம் கையகப்படுத்துவதில் விவசாயிகளின் சம்மதம், சமூகத்தில் ஏற்படும் தாக்கத்தை மதிப்பிடுதல் உள்ளிட்ட சில பிரிவுகள் நீக்கப்பட்டதே கடும் எதிர்ப்புகளுக்குக் காரணமாக கூறப்படுகிறது.

இதனிடையே, நிலம் கையகப்படுத்தும் மசோதாவை ஆய்வு செய்துவரும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை பெறுவதற்கு மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இக்குழுவின் 30 உறுப்பினர்களில் அதிமுக உள்ளிட்ட 6 கட்சிகளின் உறுப்பினர்கள் இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் உள்ளதும் இங்கே கவனிக்கத்தக்கது,

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x