Published : 21 Jul 2015 05:34 PM
Last Updated : 21 Jul 2015 05:34 PM
கரூர் அமராவதி புதிய பால கட்டுமானத்தில் இருந்து இடிக்கப்பட்ட பொருட்களை நெடுஞ்சாலைத் துறையினர், அமராவதி ஆற்றில் கொட்டிய சம்பவம் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கரூர்- திருமாநிலையூர் இடையே அமராவதி ஆற்றில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தில் சுங்க வசூல் செய்யப்பட்டபோது, சுங்க வசூலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட 2 சக்கர வாகனங்கள் சென்று வருவதற்காக பாலத்தின் மேற்கு பகுதியில் சிறு சிமென்ட் தடுப்பு அமைத்து 2 சக்கர வாகனங்கள் சென்றுவர பாதை அமைக்கப்பட்டது.
2005-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அமராவதி புதிய பாலத்தின் சர்வீஸ் ரோடு இடிந்ததால் பாலத்தில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. அதன்பின் பாலத்தில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியபோது பாலத்தில் சுங்க வசூல் ரத்து செய்யப்பட்டது. இருந்தபோதும் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக 2 சக்கர வாகனங்கள் செல்ல அமைக்கப்பட்டிருந்த தடுப்பு அப்படியே தொடர்ந்தது. 2 சக்கர வாகனங்கள் சென்றுவர அமைக்கப்பட்ட சிறுதடுப்பை அகற்றவேண்டும் என மக்கள் கோரியது குறித்து கடந்தாண்டு ஜூலை 24-ல் ‘தி இந்து’வில் செய்தி வெளியானது.
இந்நிலையில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை அடுத்து கடந்த மே மாதம் அமராவதி புதிய பாலத்தில் 2 சக்கர வாகனங்கள் சென்றுவர அமைக்கப்பட்டிருந்த சிறு சிமென்ட் தடுப்பை அகற்றும் பணியை நெடுஞ்சாலைத் துறை தொடங்கியது. ட்ரில்லர் மூலம் சிமென்ட் சிறு தடுப்பு இடித்து அகற்றப்பட்டது.
இடிக்கப்பட்ட கட்டுமானப் பொருட்கள் பாலத்திலேயே குவித்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் அமராவதி புதிய பால கட்டுமானத்தில் இருந்து இடிக்கப்பட்ட பொருட்களை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அவற்றை பாலத்தின் மேலிருந்து அமராவதி ஆற்றில் கொட்டினர். இதனால் சிமென்ட் புழுதி காற்றில் பறந்ததால் 2 சக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்றனர்.
நீர் நிலைகளை முறையாகப் பாதுகாத்தால்தான் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கமுடியும், நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்பதற்காக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் நெடுஞ்சாலைத் துறையே இப்படி பொறுப்பின்றி பால கட்டுமானத்தில் இருந்து இடிக்கப்பட்ட பொருட்களை ஆற்றில் கொட்டியுள்ளனர்.
அமராவதி ஆற்றின் நகர் பகுதியில் முள்செடிகள் மண்டிக் கிடந்ததால் அமராவதி ஆற்றில் வெள்ளம் வந்தபோது, வடிவதற்கு வழியின்றி குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் சில மாதங்களுக்கு முன் அமராவதி ஆற்றில் நகர் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் பொக்லைன் மூலம் முட்செடிகள் அகற்றப்பட்டன.
இப்படி அமராவதி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி ஒரு பக்கம் நடைபெற, மற்றொரு பக்கம் நெடுஞ்சாலைத் துறையினர் கட்டுமானத்தில் இருந்து இடிக்கப்பட்ட பொருட்களை ஆற்றில் கொட்டியது பொதுமக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை கோட்டப்பொறியாளர் ரவிகார்த்திகேயனிடம் கேட்டபோது, “பாலத்தின் கட்டுமானத்தில் இருந்து இடிக்கப்பட்ட குறைந்த அளவு பொருட்கள் மட்டுமே குவித்து வைக்கப்பட்டிருந்தது. அவை வெறும் சிமென்ட் மற்றும் ஜல்லிக் கற்கள்தான். அவற்றால் பாதிப்பு எதுவும் இருக்காது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT