Published : 17 Jul 2015 02:04 PM
Last Updated : 17 Jul 2015 02:04 PM

தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: மனித உரிமை ஆணைய உதவி இயக்குநர் வேதனை

தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது என தேசிய மனித உரிமை ஆணையத்தின் உதவி இயக்குநர் பி. ராமசாமி தெரிவித்தார்.

உடுமலை அருகே சின்ன பொம்மன்சாளை கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (40). புங்கமுத்தூர் கிராம ஊராட்சியின் துப்புரவுத் தொழிலாளியாக உள்ளார். கடந்த 9 ம் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர், இவரது கை, கால்களை கட்டி வைத்து தாக்கியதில், பலத்த காயமடைந்து உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, 12-ம் தேதி வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அதன் பிறகு, தலித் அமைப்புகளின் முயற்சியால் மீண்டும் 13-ம் தேதி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் உதவி இயக்குநர் பி.ராமசாமி விசாரணை நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஒருசில சம்பவங்கள்தான் வெளியே தெரிய வருகிறது.

பெரும்பாலான சம்பவங்கள் சமரசம் செய்யப்படுகின்றன. உடுமலையில் நடைபெற்ற சம்பவம் மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது. பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாக்கப் பட்டவருக்கு, எல்லோரையும் போலவே சமமாகக் கருதி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவருக்கு உரிய அனைத்து நடவடிக்கைகளுமே மிக தாமதமாக கிடைத்து வருவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு உரிய நிவாரணத் தொகையை விரைந்து வழங்க அதிகாரிகளுக்கும், தேவையான சிகிச்சையை தொடர்ந்து வழங்க மருத்துவமனை நிர்வாகத்துக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய காவல் துறையை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, 'உடுமலை அருகே சின்னபொம்மன்சாளை கிராமத்தைச் சேர்ந்த திருமலைசாமி(50) அவரது மகன் செந்தில்குமார்(32) ஆகியோர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமலைசாமி நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மகனை தேடி வருகிறோம். இதுகுறித்து தளி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x