Published : 20 Jul 2015 08:00 AM
Last Updated : 20 Jul 2015 08:00 AM

கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக் குழு திட்டவட்டம்: கடைகளில் விதிமீறல் இருந்தால் உரிமம் புதுப்பிக்க முடியாது

கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கடைகளில் விதிமீறல் இருந்தால் அந்த கடைகளுக்கு புதுப்பிக்கப்பட்ட உரிமம் வழங்குவதில்லை என்று மார்க்கெட் நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் 3,146 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதன் உரிமத்தை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். உரிமம் புதுப்பிக்கும் பணியை மார்க்கெட் நிர்வாகக் குழுவின் முதன்மை நிர்வாக அலுவலர் மேற்கொண்டு வருகிறார்.

இதற்கு முன்பு, உரிமம் புதுப்பிக்க விண்ணப்பித்தால் உடனே புதுப்பிக்கப்பட்டுவிடும். இந்நிலையில் அண்மைக் காலமாக மார்க்கெட்டில் உள்ள கடைகளில் தேவைக்கு ஏற்ப கட்டுமான வடிவமைப்பு மாற்றப்படுவது மார்க்கெட் நிர்வாகத்துக்கு தெரியவந்தது. உரிம விதிகளிலேயே கட்டிட வடிவமைப்புகளை மாற்றக் கூடாது என்று இருக்கும் நிலையில், கட்டிட வடிவமைப்பை மாற்றிய சில கடைகளுக்கு மார்க்கெட் நிர்வாகம் சீல் வைத்தது.

2015-2018 ஆண்டுகளுக்கான உரிமத்தை புதுப்பிக்க 500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட கடைகளில் கட்டுமான விதிமீறல்கள் இல்லை என்றால் மட்டுமே உரிமத்தை புதுப்பிக்க மார்க்கெட் நிர்வாகக் குழுவின் முதன்மை நிர்வாக அலுவலர் எஸ்.முருகையா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மார்க்கெட் நிர்வாகக் குழு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கடையின் உள் கட்டுமானம் மற்றும் முகப்பில் மாற்றம், சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்திருப்பது போன்றவை செய்யப்பட்டிருந்தால், அக்கடைகள் விதிமீறலில் ஈடுபட்ட கடைகளாகக் கருதப்படும். இக்கடைகளுக்கு உரிமத்தை புதுப்பிக்க முடியாது. இக்கடைகளுக்கு 15 நாட்களுக்குள் விதிமீறலை சரி செய்ய அவகாசம் வழங்கப்படும். சரி செய்யாவிட்டால் கடைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி பின்னர் சீல் வைக்கப்படும்.

இது தொடர்பாக திராட்சை வியாபாரி ஒருவர் கூறும்போது, “இந்த நடைமுறை வரவேற்கத்தக்கது. இதை முன்பே செய்திருக்க வேண்டும்” என்றார்.

தக்காளி வியாபாரி ஒருவர் கூறும்போது, “கடந்த ஏப்ரலில் உரிமம் புதுப்பிக்கக்கோரி உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தோம். இதுவரை உரிமம் புதுப்பிக்கப்படவில்லை. இதனால் கடைக்காரர்கள் வங்கிக் கடன் பெற முடியவில்லை. இந்நிலையில் கடைகளை ஆய்வு நடத்திய பிறகே உரிமம் புதுப்பிக்கப்படும் என்ற நிர்வாகத்தின் முடிவு ஏற்புடையதல்ல. புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை விரைவாக வழங்க மார்க்கெட் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x