Published : 18 May 2014 01:23 PM
Last Updated : 18 May 2014 01:23 PM

நிர்வாகிகள் களையெடுப்புக்கு திமுக தலைமை திட்டம்: தேர்தல் தோல்வியால் ஸ்டாலின் தலையில் விழும் பொறுப்புகள்

கூட்டணி சொதப்பல், வேட்பாளர் தேர்வில் ஆதிக்கம், கோஷ்டிப்பூசல் என திமுகவின் படுதோல்விக்கு முழுபொறுப்பும் ஸ்டாலின் மீது விழுந்துள்ளதால், நிர்வாகிகளை களையெடுக்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. ஸ்டாலினிடமிருந்து நேரடியாக கட்சி நிர்வாகத்தை கருணாநிதியே கையிலெடுப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 1991-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த மக்களவைத் தேர்தலில் திமுக பூஜ்யம் என்ற அளவில் படுதோல்வியை சந்தித்துள்ளது. தோல்விக்கான காரணங்கள் குறித்து திமுக தலைவர் கருணாநிதி, கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார். பொருளாளர் ஸ்டாலினின் ஒருதலைப்பட்சமான முடிவுகளே தோல்விக்கு காரணம் என அவரை ஒட்டுமொத்த பொறுப்பாளராக்க சிலர் முயற்சிக்கின்றனர். பல மாவட்டங்களில் இருந்து கட்சியின் நிர்வாகிகள் தலைமைக்கு போன் செய்து, இந்தத் தகவல்களை தெரிவிப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 2001 சட்டசபைத் தேர்தலில் சாதி, மத கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட திமுக தோல்வி அடைந்தது. அப்போதும் ஸ்டாலின்தான் நேரடியாக முடிவெடுத்து, தேர்தல் பணிகளை நிர்வகித்தார். அதே போல இப்போதும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி முடிவெடுப்பது, வேட்பாளர் தேர்வு, அழகிரி உள்பட திமுகவினர் மீது ஒழுங்கு நடவடிக்கை என அனைத்தையும் ஸ்டாலினே தனது ஆதிக்கத்தில் மேற்கொண்டுள்ளார்.

சரியான கூட்டணி அமைக்காதது திமுகவின் மிக மோசமான முடிவாக அப்போதே பேசப்பட்டது. காங்கிரஸும், பாஜகவும் கூட்டணிக் காக பலமுறை தூது விட்டபோது, ஸ்டாலின்தான் கூட்டணி வேண்டா மென்று தடுத்து விட்டதாக கூறப்பட்டது. கடைசி கட்டத்தில் தேமுதிகவுக்காக காத்திருந்து கோட்டை விட்டது, அதிமுக அணியி லிருந்து வெளியேறிய கம்யூனிஸ்ட் கட்சிகளை கூட்டணிக்கு இழுக்க முயற்சி மேற்கொள்ளாதது போன்ற ஸ்டாலினின் முடிவுகள் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளன.

மேலும் வேட்பாளர் தேர்வில் கருணாநிதியாலேயே எதையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அவர் நினைத்த யார் பெயரையும் பட்டியலில் ஏற்ற முடியவில்லை. கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்கள், உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு வேண்டப்பட்டவர்கள் என்று கட்சிக்கு தொடர்பே இல்லாதவர் களை வேட்பாளராக்கியது அடுத்த கட்ட தவறான முடிவாகக் கருதப் படுகிறது.

தேர்தல் நேரத்தில் மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையும் திமுக விசுவாசிகளான மூத்த நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் தராததும் தோல்விக்கான காரணி களாகக் கூறப்படுகிறது. பிரச்சாரத் தின்போது தனக்கும் கருணாநிதிக் கும் மட்டும் முக்கியத்துவம் கொடுத்து கூட்டங்களை ஏற்பாடு செய்யுமாறு ஸ்டாலின் கூறியிருந் ததும், கனிமொழி உள்பட மற்ற முக்கிய நிர்வாகிகள் செல்லும் போது, ஸ்டாலின் ஆதரவாளர்கள் கண்டுகொள்ளாததும் திமுகவின ரையே கடும் அதிருப்திக்கு ஆளாக் கியது.

இதுபோன்று எல்லா முடிவுகளும் ஸ்டாலின் அதிகாரத்திலேயே எடுக்கப்பட்டதால், அவரே தோல்விக்கான முழு பொறுப்புகளையும் ஏற்க வேண்டும் என இப்போது கட்சிக்குள் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், கட்சியின் உயர் நிலைக்குழு, செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்களை கூட்டி களையெடுப்பு பணிகளை மேற்கொள்ளவும் அடுத்த சட்ட சபைத் தேர்தலுக்குள் கட்சியை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சித் தலைமையிடம் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x