Published : 19 May 2014 08:01 AM
Last Updated : 19 May 2014 08:01 AM
தமிழகத்தில் பல்வேறு கருத்துக் கணிப்புகளையும் மீறி 37 இடங்களில் அதிமுக வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு அதிமுகவின் பிரச்சார உத்திகளும், இலவச திட்டங்களும் பெரிய அளவில் துணை புரிந்துள்ளன. மத்தியில் பாஜக அமைச்சரவையில் இடம்பெற முடியாத நிலை உள்ளபோதிலும், நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட அதிமுக முடிவு செய்துள்ளது.
அமைதி, வளம், வளர்ச்சி ஆகிய வற்றை முன்னிறுத்தி ஜெயலலிதா மேற்கொண்ட பிரச்சாரம் மக்களை வெகுவாகச் சென்றடைந்தது அதிமுக பெற்றிருக்கும் பெருவெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும்.
வளர்ச்சித் திட்டங்கள்
தேர்தல் பிரச்சாரத்தின்போது முதல் வரையும், தமிழக அரசின் செயல் பாட்டையும் எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்துப் பேசி வந்தனர். ஆனால், தனி ஒருவராக தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் செய்து, அரசின் சாதனைகளை விளக்கி முதல்வர் ஜெயலலிதா செய்த பிரச்சாரம், மற்ற கட்சிகளின் தனி மனித தாக்குதல் பிரச்சாரத்தை முறியடித்தது.
இலவச அரிசி, விலையில்லா மடிக் கணினி, விலையில்லா பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள், அனைவருக்கும் விலையில்லா மிக்சி, கிரைண்டர் போன்ற திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியதும் அவற்றை பிரச் சாரத்தில் மக்களிடம் கொண்டு சேர்த்த தும் அதிமுக-வுக்கு பலம் சேர்த்தது.
இதுதவிர, ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு திருமாங்கல்யம் மற்றும் ரூ.50 ஆயிரம் வரை உதவி, சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் மற்றும் இந்தியாவிலேயே முதல் முறையாக விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் போன்ற திட்டங் களும் அதிமுக-வுக்கு வாக்குகளை குவித்தன.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை உச்சநீதிமன்றம் மூலம் போராடி பெற்றது விவசாயிகளிடையே நன்கு எடுபட்டது. 100 நாள் வேலைத் திட்டத்தில் சம்பளத்தை உயர்த்தியது கிராமப்புற மக்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதுதவிர ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க தீர் மானம் இயற்றியது, தமிழக மீனவர் நலனுக்காக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவது போன்றவை யும் நல்ல பலன்களைத் தந்துள்ளன.
நகர்புறங்களில்
அம்மா உணவகங்கள், 6 ஆயிரம் புதிய பஸ்கள், சென்னையில் மினி பஸ்களை இயக்கியது ஆகியவை நகரவாசிகளிடம் அதிமுக-வின் செல்வாக்கை அதிகரித்தன. வளர்ச்சி என்ற வாதத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்த அதிமுக-வுக்கு பொதுமக்கள் வாக்குகளை அள்ளித்தந்தனர்.
சமூகவலைத்தளம்
இதுதவிர முதல்முறையாக சமூக வலைத்தளத்தில் செய்த தீவிர பிரச்சாரம், எல்.இ.டி. வேன்களில் மூலை முடுக்குகளுக்குச் சென்று பிரச் சாரம் செய்தது, தொலைபேசி மூலம் பிரச்சாரம் செய்தது போன்றவை இளைஞர்களையும், இதர தரப்பின ரையும் ஈர்த்தது. இப்படி எல்லா வகையிலும் முறையாக திட்டமிட்டு தேர்தலை அணுகியது அதிமுக-வுக்கு சாதகமாக அமைந்துள்ளது.,
இது பற்றி அக்கட்சியின் மூத்த எம்.பி, ஒருவர் கூறுகையில், “முதல்வரின் திட்டமிட்ட பிரச்சார அணுகுமுறை, இலவசத் திட்டங்கள் ஆகியவை மக்களிடம் நன்கு போய் சேர்ந்துள்ளன. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தாலும் கூட அவர்களுடன் இணக்கமாக இருப்பார் என்பதால் தமிழக மக்கள் முதல்வரை நம்பி அதிமுக-வுக்கு பெருவாரியாக வாக்களித்திருக்கிறார்கள்,” என்றார்.
மத்தியில் அனுசரித்து…..
தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக்கட்டத்தில் தவிர்க்க முடியாமல் ஒருவரையொருவர் விமர்சித்துக் கொண்டாலும், மோடியும், ஜெயலலிதாவும் நீண்ட கால நண்பர்கள் என்பதால் அது ஒரு பிரச்சினையாக இருக்காது என்று கூறப்படுகிறது. அதுபோல் மாநிலத்தின் உரிமையை விட்டுக் கொடுக்காத வகையில் பாஜகவுடன் இணக்கமாக செயல்பட அதிமுக முடிவெடுத்திருப்பதாகத் கூறப்படுகிறது. அதனால்தான் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா உடனடியாக வாழ்த்துத் தெரிவித்தார். மத்தியில் இணக்கமான அரசு இல்லாததால் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்பதை இருவருமே நன்கு அறிவார்கள். மாநில அரசியலில் இருந்து சென்றவர் என்பதாலும் பல பிரச்சினைகளில் மத்திய அரசுக்கு எதிராக முதல்வருடன் இணைந்து குரல் கொடுத்தவர் என்பதாலும் நரேந்திர மோடியும் மாநில அரசுகளுடன், குறைந்தபட்சம் அதிமுக-வுடன் இணக்கமாக இருப்பார் என்று அக்கட்சியினர் உறுதியாகக் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT